மதுரை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை உட்பட 6 மாவட்டங்களில் பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை அருகே அழகர்கோயிலில் சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். முன்னதாக, இக்கோயிலில் இந்த திருவிழா கடந்த டிச.20ம் தேதி (பகல்பத்து – ராபத்து) உற்சவத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று காலை 6.15 மணிக்கு நடந்தது. அப்போது, கோவிந்தா கோவிந்தா என பக்தர்களின் பக்தி கோஷத்துடன் மேளதாளம் முழங்க, வர்ண குடை, தீவட்டி, பரிவாரங்களுடன் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முன்னதாக நம்மாழ்வார் பரமபதவாசல் வழியாக வரும் பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சர்வ அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார். இன்று சொர்க்க வாசல் வழியாக செல்ல முடியாத பக்தர்களுக்காக 9 நாட்களுக்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக மதுரை உள்பட வெளி மாவட்ட பக்தர்களும் கடுங்குளிரை பொருட்படுத்தாமல் நள்ளிரவு முதல் அழகர்கோயில் வளாகத்தில் குவிந்து காத்திருந்தனர். மூலவர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரராஜ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயில் காவல் தெய்வமான 18ம் படி கருப்பணசாமி சன்னதியிலும் தரிசனம் செய்தனர். இதேபோல் இக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும் அதிகாலை 6.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதேபோல, சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 5.15. மணியளவில் ஜெனக நாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வணங்கினர். இதேபோல, குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் அமைந்துள்ள பழமையான வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வெங்கடாஜலபதி பெருமாள், நம்மாழ்வார் சுவாமிகள் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பெருமாள் கோயிலின் உள்பகுதியிலும், ஆழ்வார் வெளிப்பகுதியிலும் வைக்கப்பட்டு ஆழ்வார் பாசுரங்கள் பாடி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம்:
மானாமதுரை கீழ்கரை சுந்தரராஜபெருமாள் கோயிலில் அதிகாலையில் உற்சவருக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 11 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர், சுந்தரவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை 5.32 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேல்கரையில் உள்ள தியாகவினோத பெருமாள் கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் வழியாக வந்த பெருமாள் முக்கிய வீதிகளில் உலா வந்தார். மேட்டுதெருவில் உள்ள அப்பன் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். இதேபோல, காரைக்குடி அருகே அரியக்குடியில் அமைந்துள்ள தென்திருப்பதி என்று அழைக்கப்படும், திருவேங்கடம் உடையான் கோயில் மற்றும் கழனிவாசல், செஞ்சை பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம்:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் அமைந்துள்ள மிகவும் பழமையான, சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் அன்னக்கொடி, செயல் அலுவலர் யுவராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.பழநியில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்களில் ஸ்ரீதேவி – பூதேவி சமேத பெருமாளுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டன. இதன்பிறகு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பழநி லட்மிநாராயண பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் லட்சுமி சமேத நாராயண பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று ரதவீதிகளில் உலா வந்தார். பின்னர், பக்தர்கள் பரமபத வாசலை கடந்து சென்றனர். இதுபோல் பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி – பூதேவி சமேதரராக வரதராஜ பெருமாள் பரமபத வாசலைக் கடந்து நகர் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோதண்டராமசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலையில் ராமர், லட்சுமணன், சீதைக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து பரமபத வாசல் வழியாக வந்து காட்சியளித்தார். பின்னர், வீதி உலா நடைபெற்றது.இதேபோல, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களிலும் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
