தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்ற நினைப்பவர்களின் கனவு பலிக்காது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். கொளத்தூர், ரெட்டேரி சாலை சந்திப்பு அருகில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரிக்கரை பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை வரும் ஜனவரி 10ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம், வர்த்தக மையம், டயாலிசிஸ் சென்டர், தாசில்தார் அலுவலகம் கட்டும் பணி, திருமண மண்டபம், படைப்பகம் ஆகியவை என 8 திட்டங்கள் ஜனவரி இறுதிக்குள் அல்லது பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதன் பணிகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஜாதியால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த முடியவில்லை என்ற ஏக்கத்தில் பாஜ இருக்கிறது. அதனால், நயினார் நாகேந்திரன் விரக்தியில் பேசி வருகிறார். நம்மை பொறுத்தவரை மனித உணர்வுடன் ஒற்றுமையோடு பயணித்து வருகிறோம்.

நயினார் நாகேந்திரன் போன்றவர்களின் பிரிவினை வாதம் தமிழகத்தில் எடுபடாது. அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்ந்து கொண்டு வருகிறது. தமிழகத்தை மணிப்பூராக மாற்ற நினைப்பவர்களின் கனவு இங்கே பலிக்காது.
சட்டம் ஒழுங்கு முழுமையாக நிலைநாட்டப்பட்டு கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முழுமையாக பாஜவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டார். ஆகவே அவர்கள் கொண்டுவரும் எந்த திட்டமாக இருந்தாலும் அதை புகழ்ந்து பேசுவது தான் அவர் கொள்கையாக மாறிவிட்டது. முன்னுக்குப் பின் முரணாக பேசுபவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது சீமான் தான். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ். சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: