எஸ்ஐஆர் பணிகள் பிப். 10 வரை தொடரும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: எஸ்ஐஆர் பணிகள் பிப்ரவரி 10ம் தேதி வரை தொடரும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பான அறிவிப்பு காலம் 19.12.2025 அன்று தொடங்கியது. இந்த காலத்தில், விவரங்களை உறுதிப்படுத்த வேண்டிய அல்லது திருத்தம் மற்றும் சரிபார்ப்பு தேவைப்படும் அனைத்து வாக்காளர்களுக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு அறிவிப்பிலும் தனித்துவமான அறிவிப்பு எண் இடம்பெறும். இதன்மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், இந்த அறிவிப்பினை கண்காணிக்கவும் இயலும். விசாரணை நடைபெறும் இடம் அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்படும். அறிவிப்பு வாக்காளருக்கு வழங்கப்பட்ட பின்பு, அதற்கான ஒப்புகைச்சீட்டின் விவரங்கள் பிஎல்ஓ செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன்மூலம் வாக்காளருக்கு அறிவிப்பு வழங்கிய நேரத்தை கண்காணித்து சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படும்.

இந்த கட்டத்தில் மொத்தம் 12,43,363 வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட உள்ளன. அறிவிப்பை பெற்ற வாக்காளர்கள், இந்திய தேர்தல் ஆணையம் 27.10.2025 அன்று வெளியிட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பான உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட ஆவணங்களை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வாக்காளர் பதிவு அலுவலர் நிர்ணயிக்கும் விசாரணை நாளில் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் ஆய்வு செய்து ஒவ்வொரு நேர்விலும் உத்தரவு பிறப்பிப்பார்கள்.

அறிவிப்பு காலகட்டம் டிசம்பர் 19ம் தேதி முதல் 10 பிப்ரவரி 2026 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் அறிவிப்புகள் வழங்குதல், விசாரணைகள் நடத்துதல், சரிபார்ப்பு மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தொடர்பான முடிவுகள் அனைத்தும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்களால் சம நேரத்தில் மேற்கொள்ளப்படும். அனைத்து செயல்முறைகளும் நிறைவடைந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: