திருவனந்தபுரம்: இலங்கைக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி வீராங்கனைகள் ஆரம்பம் முதலே திணறினர்.
இலங்கை அணியில் அதிகபட்சமாக இமேஷா துலானி 27 ரன்களும், ஹாசினி பெரேரா 25 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கையை கட்டுப்படுத்தினர்.
113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 1 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தார். வெறும் 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய அவர், 42 பந்துகளில் 79 ரன்கள் (11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்கள் எடுத்து அவருக்குத் துணையாக நின்றார்.இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை (77 வெற்றிகள்) குவித்த கேப்டன் என்ற உலக சாதனையைப் படைத்தார். தீப்தி சர்மா 151 விக்கெட்டுகளுடன் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனைகளின் பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற கையோடு டி20 தொடரையும் கைப்பற்றி இந்திய மகளிர் அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. தொடரின் 4-வது போட்டி இதே மைதானத்தில் நாளை (டிசம்பர் 28) நடைபெறவுள்ளது.
