வாஷிங்டன்: நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்கிய ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கப் படைகள் கிறிஸ்துமஸ் தினத்தில் அதிரடி தாக்குதல் நடத்தின. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது ஓர் இனப்படுகொலை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சோகோடோ மாநிலத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் சரமாரியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. நைஜீரிய அரசின் ஒப்புதலுடனும், அவர்களின் கோரிக்கையின் படியும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ஆப்பிரிக்கப் படைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தினார்.
