திருவனந்தபுரம்: இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய மகளிர் அணி வென்ற நிலையில் 3வது டி20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸில் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ய இலங்கை மகளிர் அணியின் ஓபனராக இறங்கிய கேப்டன் சமாரி அத்தபட்டு 3 ரன், ஹாசினி பெரேரா 25 ரன்னில் வெளியேறினர்.
அடுத்து இறங்கிய ஹர்ஷிதா 2 ரன், துலானி 27 ரன், சில்வா 4 ரன், கவிஷா தில்ஹாரி 20 ரன், ஸ்னேகினி 5 ரன்னில் நடையை கட்டினர். கவுஷானி 19 ரன், மதாரா 1 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட், தீப்தி சர்மா 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது.
ஓபனராக இறங்கி ஸ்மிரிதி மந்தனா 1 ரன், ரோட்ஜிரிஸ் 9 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். எனினும் மற்றொரு ஓபனரான ஷிபாலி வர்மா 42 பந்தில் 11 போர், 3 சிக்சருடன் 79 ரன்களும், கேப்டன் கவுர் 21 ரன் எடுக்க இந்திய அணி 13.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா அணி இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
