ஊட்டி: 2026ம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு பணி நேற்று துவங்கியது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை மகிழ்விக்க ஆண்டு தோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். மலர் கண்காட்சி தினத்தன்று மலர் தொட்டிகள் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அழகான வடிவங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.
மலர்கண்காட்சிக்கு பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இவைகளின் வளர்ச்சி காலத்தை பொறுத்து விதை விதைக்கும் பணிகள் துவங்கும். ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் விதைகள் சேகரிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் விதை விதைக்கும் பணிகள் துவங்கும். கடந்த மாதம் விதைகள் விதைக்கும் பணிகள் முடிந்த நிலையில், 6 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகளான பெகோனியா, ரெகன்கிளாசம், வால்சம், சோலியாஸ், லிசியந்தால், சால்வியா மற்றும் டென்பீணம் ஆகிய வகைகளை சேர்ந்த மலர் நாற்றுக்கள் தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் நர்சரியில் உற்பத்தி செய்யப்பட்டது.
நாற்றுகள் தயாராக உள்ள நிலையில் 5 மாதங்களுக்கு பின் பூக்கும் தாவரங்களான சால்வியா உட்பட பல்வேறு மலர் செடிகள் நடவு பணிகள் பூங்காவில் துவக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்கா குளங்களின் ஓரங்களிலும், அங்குள்ள பாத்திகளில் சால்வியா மலர் செடிகள் நடவு பணிகள் துவங்கியது. குளங்களை சுற்றிலும் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள பிற இடங்களிலும் 5 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகளை நடவு செய்யும் பணிகள் படிப்படியாக துவக்க பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
