×

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வாக்குச்சாவடிகளில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

*கலெக்டர் ஆய்வு

ஊட்டி : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 தொடர்பாக ஊட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி பீகார் மாநிலத்தை தொடர்ந்து 2வது கட்டமாக தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்.,) – 2026 கடந்த மாதம் 4ம் தேதி துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 89 ஆயிரத்து 167 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட சிறப்பு திருத்த படிவங்கள் கடந்த 14ம் தேதி வரை திரும்ப பெறப்பட்டது.தொடர்ந்து கடந்த 19ம் தேதி எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப வழங்கிய 5 லட்சத்து 33 ஆயிரத்து 076 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

திரும்ப பெறப்படாத கணக்கெடுப்பு படிவங்களில் கண்டறிய முடியாத வாக்காளர்கள் 5863, நிரந்தரமாக இடம் பெயர்ந்த வாக்காளர்கள் 27 ஆயிரத்து 939, இறந்த வாக்காளர்கள் 18 ஆயிரத்து 975, இரட்டை பதிவுள்ள வாக்காளர்கள் 3292 மற்றும் இதர வாக்காளர்கள் 22 என மொத்தம் 56 ஆயிரத்து 091 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

டிசம்பர் 19ம் தேதி முதல் முதல் ஜனவரி 18ம் தேதி வரை உரிமைக்கோருதல் மற்றும் மறுப்புரை தெரிவித்தல் போன்றவற்றை உரிய படிவங்கள் வாயிலாக தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். மேலும், உரிமை கோரல் மற்றும் மறுப்புரை தெரிவித்தல் காலத்தில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 736 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 தொடர்பாக வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. இதில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், புதிய வாக்காளர்கள் உரிய படிவங்களை வழங்கினர்.

ஊட்டி ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊட்டி நகராட்சி ஆணையர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Election Commission of India ,Bihar ,
× RELATED திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி...