×

வீடற்றோருக்கான இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 

சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (22.12.2025) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை, அண்ணா பூங்கா அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வீடற்றோருக்கான இரவுநேர காப்பகத்தினை திறந்து வைத்து, காப்பகத்தில் தங்கிடும் 86 நபர்களுக்கு பாய், தலையணை, படுக்கைவிரிப்பு உள்ளிட்ட நல உதவி தொகுப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சென்னை மெரினா கடற்கரையில் தங்கி, கைவினைப் பொருட்கள், பலூன்கள், அழகு சாதன பொருட்கள், பூக்கள் எல்லாம் விற்று வந்த 86 ஆதரவற்றோர்களுக்கு நம்முடைய முதலமைச்சரின் உத்தரவின்பேரில், சென்னை மாநகராட்சியின் சார்பாக, இங்கே கடற்கரை பகுதியில் அவர்கள் தங்கியிருப்பதற்காக 2,500 சதுர அடியில் 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடற்றோர் இரவு நேர காப்பகத்தை இன்று நானும் நம்முடைய அமைச்சர் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர், மேயர், துணை மேயர் எல்லோரும் வந்து இன்றைக்கு திறந்து வைத்திருக்கின்றோம்.

இரவு நேரங்களிலும், மழை நேரங்களிலும், வெயிலிலும் அவர்களுக்கு தங்குவதற்கு இடமில்லாமல் இருந்த சூழலில் அவர்களுக்கெல்லாம் இந்த வசதி ஒரு பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு முதலமைச்சர் இந்த கட்டளையிட்டுள்ளார்கள். இந்த காப்பகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பிடங்கள், குளியலறைகள், அவர்கள் பொருட்களை எல்லாம் சேமித்து வைப்பதற்கு அலமாரிகள், குடிநீர் வசதி, மின் வசதி இப்படி அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு இன்றைக்கு மாநகராட்சியின் சார்பாக பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களும் தரப்பட்டிருக்கிறது. இதே மாதிரி மெரினாவில் தங்கியிருக்கக்கூடிய மற்றவர்களுக்கும் இதுபோன்ற வசதியை விரிவுபடுத்துவதற்கான அந்த ஆலோசனைகளிலும் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். ஏற்கனவே மாநகராட்சியின் சார்பாக வீடற்றோர்களுக்கு ஒரு 45 இடங்களில் இதுபோன்று வசதிகள் இருக்கின்றது. இது கூடுதலாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் ஆய்வு செய்து இங்கு பக்கத்திலேயே சொன்னதுபோல இன்னும் அதிகமான பேர் தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆலோசனைகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆரம்பத்தில் இருந்தே SIR திட்டத்திற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். இந்த கால அவகாசம் போதாது என்று சொல்லியிருக்கிறோம். முக்கியமாக பீகாரில் SIR அறிவித்து யாருடைய வாக்குகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கிறது என்று தெளிவாக நம்முடைய முதலமைச்சர் தான், முதல்வர் தான் சொன்னார். எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்குகளை நீக்கியிருக்கின்றார்கள். 97 இலட்சம் நீக்கியிருக்கின்றார்கள். சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது, எங்களுடைய தலைவர், தெளிவாக அத்தனைபேருக்கும் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். நீக்கப்பட்ட வாக்குகள், விடுபட்டுபோனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் இவர்களையெல்லாம் எப்படி சேர்ப்பது என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.

பொதுமக்கள் சென்று அவர்கள் வாக்குகள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். அங்கு இருக்கக்கூடிய நம்முடைய BLA2 அவர்களை தொடர்பு கொண்டால், நிச்சயம் அதையெல்லாம் சேர்ப்பதற்கு, ஜனவரி 18 வரை நேரம் உள்ளது மீண்டும் சேர்ப்பதற்கு, எனவே அந்த பணிகளில் ஈடுபடுத்துவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ். மதன்மோகன், இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Greater Chennai Corporation ,Marina Beach ,Anna Park ,Teynampet ,Chepauk-Thiruvallikeni assembly ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...