கொடைக்கானல் : வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் நேற்று சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்தாலும் மாலை, இரவு வேளைகளில் கடும்குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக அதிகாலையில் 5 டிகிரி செல்சியஸிற்கும் குறைவான வெப்பநிலை பதிவாகி உறைபனி அதிகளவில் கொட்டுகிறது. இந்த உறைய வைக்கும் குளிரை அனுபவிக்க சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
நேற்று வார விடுமுறையை கொண்டாட தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் அதிகளவில் வந்திருந்தனர். குளிர் சீசனை அனுபவித்தபடி சுற்றுலாப்பயணிகள் தூண் பாறை, மோயர் பாயிண்ட், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர் வாக், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனர்.
இதுதவிர நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தபடி படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியை பார்வையிட்டதோடு, அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து இளைப்பாறியும் செல்பி, குரூப் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.
இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் விடுமுறை, பள்ளி தேர்வு விடுமுறை வரவிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சுற்றுலா கைடுகள், வர்த்தகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
