தமிழ்நாட்டில் முதல்முறையாக ஊட்டியில் வளர்ப்பு நாய்களுக்கான விளையாட்டு பூங்கா திறப்பு

*இணையத்தில் பதிவு செய்து பயனடையலாம்

ஊட்டி : தமிழ்நாட்டில் முதல்முறையாக ஊட்டி மரவியல் பூங்கா வளாகத்தில் பசுமை வரி செயலாக்க திட்டத்தின் கீழ் ரூ.42.30 லட்சத்தில் வளர்ப்பு நாய்களுக்கான விளையாட்டு பூங்கா திறக்கப்பட்டுள்ளது.சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது செல்லப் பிராணியான நாயையும் அழைத்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள பூங்காக்கள், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் நாயை அழைத்து செல்ல அனுமதியில்லை.

இதனால் அவற்றை தனியாக அறையில் விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஊட்டியில் நாய்கள் வளர்ப்பவர்கள் அவற்றை தனியாக நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்லவும் நாய்களுக்காக பிரத்தியேக பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஊட்டி மரவியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டு நாய்கள் விளையாடி மகிழ புற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை, சிறு குளம், ஸ்பிரிங்லர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர குப்ரஸ் மரங்களை கொண்டு அலங்கார வேலி உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக பசுமை வரி செயலாக்க திட்டத்தின் கீழ் ரூ.42.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளர்ப்பு நாய்களுக்கான பூங்காவை நீலகிரி எம்பி., ராசா திறந்து வைத்தார். இப்பூங்காவில் நாய்கள் பயிற்சி எடுப்பதற்கும், விளையாடவும் தனித்தனியாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. செல்ல பிராணிகளின் உரிமையாளர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் அரசு தலைமை கொறடா ராமசந்திரன்,ஊட்டி எம்எல்ஏ., கணேஷ், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், நகராட்சி ஆணையர் கணேஷ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ், கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய இணையதளம் துவக்கம்

ஊட்டியில் திறக்கப்பட்டுள்ள வளர்ப்பு நாய்களுக்கான பிரத்யேக பராமரிப்பு பூங்காவினை பயன்படுத்த செல்ல பிராணிகளின் உரிமையாளர்கள் பதிவு செய்ய புதியதாக umcpetregistration.in என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் வளர்ப்பு பிராணிகளின் உாிமையாளர்கள் புகைப்படம், செல்ல பிராணிகளின் புகைப்படம், முகவரிக்கான சான்று, தடுப்பூசி செலுத்தியதற்கான விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்து கணக்கு துவங்கி கொள்ளலாம் என ஊட்டி நகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: