‘வாட் புரோ, இட்ஸ் வெரி ராங்க் புரோ’ ஈரோடு வரைக்கும் வந்தீங்களே… கரூருக்கு போக மாட்டீங்களா…?

* மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பதில் ஆப்சென்ட்
* ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா செல்வதற்கு மட்டும் பிரசென்ட்
* விஜய் வசனத்திலேயே பதிலடி கொடுத்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

ஈரோடு: தவெக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் பற்றி கேள்விபட்டதும் அவசர அவசரமாக புறப்பட்ட விஜய் விமானத்தில் ஏறி சென்னைக்கு பறந்தார். நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்காமல், சரியாக ஒரு மாதத்துக்கு பின் இறந்தவர்களின் குடும்பங்களை சென்னை பனையூருக்கு பஸ்களில் வரவழைத்து ஆறுதல் கூறினார். இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, தவெக தலைவர் விஜய் எந்த கூட்டத்திலும் தலைகாட்டாமல் இருந்து வந்த நிலையில், கடந்த வாரம் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டார். 41 பேர் பலிக்கு பின் தமிழ்நாட்டில் முதல்முறையாக நேற்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் பகுதியில் விஜய் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் பெருந்துறை பகுதியில் கரூர் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று, ஈரோட்டிற்கு பக்கத்து மாவட்டமான கரூருக்கு செல்லாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மூன்று விதமான சுவரொட்டிகள் அடுத்தடுத்து ஒட்டப்பட்டிருந்தது.

அந்த சுவரொட்டியில், விஜய் பேசும் வசனத்திலேயே அவருக்கு பதிலடி கொடுத்திருந்தனர். முதல் சுவரொட்டியில், ‘இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க?, ‘வாட் புரோ, இட்ஸ் வெரி ராங்க் புரோ’ என்றும், 2வது சுவரொட்டியில், ‘ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா?’ என்றும், 3வது சுவரொட்டியில், விஜய் பரிதாபங்கள் என தலைப்பிட்டு, ‘ஜனநாயகன் பட டப்பிங்கிற்கு பிரசென்ட், ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா செல்வதற்கு பிரசென்ட், ஆடம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பிரசென்ட். ஆனால், மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பது ஆப்சென்ட், மக்களை சந்திக்க கரூர் செல்வது ஆப்சென்ட், தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது கிடையாது’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்டு விஜய்க்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

இந்த சுவரொட்டியை ஒட்டியது யார்? என்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. விஜய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை அறிந்து தவெகவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். விஜய் கரூர் செல்வதற்கு பாதுகாப்பு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை தவெக நிர்வாகிகள் கூறி வந்தனர். ஆனால், பிரசாரத்துக்கு கரூரின் பக்கத்து மாவட்டமான ஈரோடுக்கு வந்த விஜய், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்காமல் சென்றது அவர்களை அதிருப்தியடைய செய்து உள்ளது. அரியலூர் அனிதா, தூத்துக்குடி ஸ்னோலின், மடப்புரம் அஜித்குமார் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு ரகசியமாக சென்று ஆறுதல் கூறி விஜய், கரூருக்கு மட்டும் இதுவரை செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: