100 நாட்கள் வேலை திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம்: எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி செயல்படுகிறார்

சென்னை: நூறு நாள் வேலை திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கொளத்தூருக்கு வந்தால், ஒரு எனர்ஜி வந்துவிடும்; ஒரு உற்சாகம் வந்துவிடும்; வேகம் வந்துவிடும்; ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும்; அது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நன்றாக தெரியும். யாராவது, “கொளத்தூர்” என்று பெயர் சொன்னாலே அது சாதனை! இல்லையென்றால் ஸ்டாலின்! என்று ஞாபகத்திற்கு வரக்கூடிய அளவிற்கு இந்த தொகுதியில் நான் இரண்டற கலந்திருக்கிறேன் என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். ஏராளமான திட்டங்களை இந்த தொகுதிக்கு நிறைவேற்றி, இந்த கொளத்தூர் தொகுதியை அமைச்சர் நேரு சொன்னது போல, 234 தொகுதிகளுக்கு நான் இந்த தொகுதியை பார்க்கின்றபோது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது; மகிழ்ச்சியாக இருக்கிறது. பயமும் இருக்கிறது என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்ல, உங்களுக்கெல்லாம் பொறாமையும் இருக்கிறது அதுதான் உண்மை.

கெட்ட எண்ணத்தில் அந்த பொறாமை இல்லை; நல்லெண்ணத்தில் தான் பொறாமையாக இருக்கிறது. நாமும் இப்படி பணியாற்ற வேண்டும்; நம்முடைய தொகுதிக்கு இந்த திட்டங்கள் வரவேண்டும் என்பதில் அவர்களும் இன்றைக்கு அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ கொளத்தூருக்கு மட்டும் நாம் இதை செய்துவிட்டோம்-மற்ற தொகுதியை கைவிட்டுவிட்டோம் என்று யாரும் நினைக்க வேண்டாம்-அனைத்து தொகுதியும் நம்முடைய தொகுதிதான். அதனால், எல்லார்க்கும் எல்லாம் என்பதை முன் வைத்து நம்முடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். என்ன சிறப்பு என்றால், ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் செல்வேன். ஆனால் கொளத்தூருக்கு மட்டும் எப்படியாவது 10 நாட்களுக்கு ஒரு முறை நான் வந்துவிடுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், ‘‘100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கிறாரே?’’ என்றனர். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘இபிஎஸ் எப்போதும் மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பார். ஆனால் இந்த விவகாரத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு பண்ணியிருக்கிறார்கள்” என்றார்.

என் வெற்றிக்குப் பின்னால் என் மனைவி: முதல்வர் பெருமிதம்
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் தான் இருக்கிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என்னுடைய மனைவி தான்-நான் மட்டுமல்ல, சேகர்பாபுவாக இருந்தாலும் சரி, நேருவாக இருந்தாலும் சரி, இங்கு இருக்கக்கூடிய நீங்களாக இருந்தாலும் சரி. ஓராண்டு காலம் நான் மிசாவில் இருந்தபோது, என்னுடைய மனைவி கோபித்துக்கொண்டு ஏதாவது முடிவு எடுத்திருந்தால் என்னுடைய நிலைமை என்னவாகியிருக்கும் நினைத்துப் பாருங்கள்-தாங்கிக் கொண்டு, பொறுமையாக இருந்து, எவ்வளவோ கொடுமைகள் எனக்கு வந்த நேரத்தில், என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திய காரணத்தினால்தான் இன்றைக்கு நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். அதுபோல தான் ஒவ்வொருவரும். அதனால் தான் மணமக்களிடத்தில் நான் பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புவது, மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும் அந்த நிலையில் நீங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: