சென்னை: கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு பலிக்காது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள் என்ற கேள்வியை திடீர் ‘கணினி நிபுணர்’ எடப்பாடி பழனிசாமி எழுப்பி இருக்கிறார். இன்னும் சில வாரங்களில் நம் மாணவர்கள் கரங்களுக்கு மடிக்கணினிகள் சென்று சேரவுள்ள நிலையில், இந்த கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள நோக்கம் என்ன என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றாக தெரியும். தன்னுடைய குறுகிய அரசியல் லாபத்திற்காக, கல்லூரி மாணவர்கள் பயன்பெற இருக்கும் ஒரு திட்டத்துக்கு எதிராக அவதூறுகளை பரப்ப வேண்டும் என்பதே அவருடைய எண்ணம்.
தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்ற பாசிச பாஜவின் எண்ணத்தை, அவர்களின் வழிகாட்டுதலின்படி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே அறநிலையத்துறை நிதியில் கல்லூரி ஆரம்பிக்கலாமா என்று கேட்டு, தமிழ்நாட்டு மக்களிடமும் – மாணவர்களிடமும் வாங்கிக்கட்டிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, இப்போது, “கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் நடுவில் ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள்,” என்கிறார். கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைப்பதை வரவேற்கும் பரந்த மனப்பான்மை கூட இல்லாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று முயற்சிக்கிறார்.
ஆனால், முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிச்சயமாக கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கத் தான் போகிறது. இதை எடப்பாடி பழனிசாமி அல்ல, அவர்களது டெல்லி ஓனர்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது. 2025-26 நிதிநிலை கூட்டத்தொடரின் போதே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது, “20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்” என்று தெளிவாக நிதிநிலை அறிக்கையில் உள்ளது. அந்த நிதிநிலை அறிக்கை அவருக்கும் வழங்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி தலைவர் அதை படித்துப் பார்த்தாரா, இல்லை, வழக்கம் போல வீட்டிலேயே வைத்துவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். லேப்டாப் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, லேப்டாப் வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்றவாறு, அதிவேக செயலி மற்றும் நீண்டநேரம் தாங்கும் பேட்டரி என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் இருக்கிறது.
கணினிகள் படிப்படியாக மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு கல்லூரி மாணவர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவுடன் அவர்களுக்கு வழங்கப்படும். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் தான் லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், 2019லேயே அந்த திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு, மாணவர்களை ஏமாற்றியவர் தான் எடப்பாடி பழனிசாமி என்பதை நாடறியும். அதற்கு 2021லேயே தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டினார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி ஏதேதோ கதைகளை சொல்கிறார். அவருடைய நோக்கம், எதையாவது சொல்லி இந்த திட்டத்தை தடுக்க முடியுமா என்பதுதான். அவருடைய எண்ணம் ஒரு போதும் பலிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்னிடம் கேட்பதுபோல விஜய்யிடம் கேளுங்கள்
மதுரை மாவட்ட அனைத்து கிறிஸ்தவ சபைகள் இணைந்து, நேற்று மாலை மதுரையில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தின. இதில் கலந்துகொள்வதற்காக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை 4.30 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருச்சி வழியாக, மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திமுகவின் இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டு பணிகள் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது?
பதில்: இப்போது மாநாடு எதுவும் இல்லை. வட மண்டலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு தான் நடந்தது.
அடுத்த மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, எப்போது, எங்கே நடக்க இருக்கிறது?
பதில்: அதுகுறித்து தலைவர் தான் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.
விஜய், கவர்மெண்ட் நடத்திருக்கிறீர்களா அல்லது கண்காட்சி நடத்துகிறீர்களா என்று கேட்டுள்ளார். அதுகுறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்: என்னிடம் இவ்வாறு கேள்விகள் கேட்பது போல், என்றைக்காவது அவரிடம், கேள்விகள் கேட்டு இருக்கிறீர்களா?
அவர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை, எனவே தான் உங்களிடம் கேள்வி கேட்கிறோம்?
பதில்: ஒரு தடவையாவது, அவரை உங்களிடம் பேச விடுங்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
