ரூ.10 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளது; போலி மருந்து முக்கிய குற்றவாளி ஒன்றிய நிதியமைச்சருடன் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் செல்வம் உதவியுடன் போலி மருந்து முக்கிய குற்றவாளி, ஒன்றிய நிதியமைச்சரை சந்தித்து வங்கி கடனுதவி கேட்டுள்ளார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி ஆளுநரிடம் மனு தந்தோம். நடவடிக்கை எடுக்காததால் டெல்லியில் போராட்டம் நடத்தி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ அரசை கலைக்க வலியுறுத்தினோம். கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளது. போலி மருந்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத்தலைவர் செல்வம் மற்றும் பாஜ தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது.

தற்போது கைதாகியுள்ள போலி மருந்து உரிமையாளர் ராஜாவை 5 மாதங்களுக்கு முன்பு சபாநாயகர் செல்வம் டெல்லி அழைத்து சென்று வங்கியில் ரூ. 100 கோடி ராஜாவுக்கு கடன் தர சிபாரிசு செய்துள்ளார். அதையடுத்து ஒன்றிய நிதி அமைச்சர் சிபாரிசில் வங்கியில் ரூ.85 கோடி வரை கடன் தர ஏற்பாடு நடந்த நிலையில் தற்போது போலி மருந்து விவகாரத்தில் சிக்கியதால் கடன் தரப்படவில்லை. சபாநாயகரை இவ்வழக்கில் சேர்க்க வேண்டும். அவரது தொகுதியில் போலி மருந்து, மூலப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி மருந்து விவகாரத்தில் பாஜவின் தலைவர்கள், அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் பங்குள்ளது.

முதல்வர் தொகுதியில்தான் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் முதல்வருக்கும் பங்குள்ளது. கடந்த 2017ல் காங்கிரஸ் ஆட்சியில் இந்நிறுவனங்களுக்கு உரிமம் தரப்பட்டதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார். அனுமதி தொடர்பான கோப்பு முதல்வருக்கு வராது. எனினும் இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். சிபிஐ விசாரணைக்கு வந்தால், இதில் தொடர்புள்ளோர் சிறைக்கு செல்வார்கள். ஒரு சில அரசியல்வாதிகள் பணம் பெற்றுள்ளனர். ராஜாவின் டைரியில் பணம் பெற்றவர்கள் விவரம் உள்ளது. சிபிசிஐடி மூடி மறைக்கிறார்கள். போலி மருந்து நிறுவன உரிமையாளருக்கு பாஜ பாதுகாப்பு தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், போலி மருந்து மோசடி வழக்கில் கைதான தொழிற்சாலை உரிமையாளரான முக்கிய குற்றவாளி ராஜாவை 7 நாள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: