மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு 6 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள்

*அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை : மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு 6 புதிய பேருந்து வழித்தட பேருந்து சேவைகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 6 புதிய பேருந்து வழித்தட சேவைகளை மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

பின்னர், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் பொருளாதாரத்தினை உயர்த்திடும் வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தின் முன்னோடித் திட்டமான, நகரப் பேருந்துகளில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, புதுக்கோட்டையில் இருந்து ராயவரம் வழியாக ஆனைவாரிக்கும், ஆலங்குடியில் இருந்து கறம்பக்குடிக்கும், திருச்சியிலிருந்து இராமேஸ்வரத்திற்கும், திருச்சியில் இருந்து திருவெற்றியூருக்கும், திருச்சியிலிருந்து அதிராம்பட்டினத்திற்கும், புதுக்கோட்டையில் இருந்து மீமிசல் வழியாக எஸ்.பி. பட்டியணத்திற்கும் என மொத்தம் 6 புதிய பேருந்து வழித்தட சேவைகள் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் புதுக்கோட்டையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பயன் பெறுவார்கள்.

எனவே, தமிழக அரசின் மூலம் பொதுமக்களின் நலனிற்காக செயல்படுத்தப்பட்டுவரும் இத்தகைய புதிய பேருந்து சேவைகளை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது;தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பொதுமக்களின் அன்றாட போக்குவரத்திற்காக பேருந்து சேவைகள் நாள்தோறும் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் 6 புதிய பேருந்து வழித்தட சேவைகளை இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் புதுக்கோட்டையில் இருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு இப்பேருந்து சேவைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

எனவே, பொதுமக்களின் போக்குவரத்து வசதியினை எளிமையாக்கிடும் வகையில் இந்த பேருந்து சேவைகள் உரிய நேரங்களில் இயக்கிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர்திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, துணை மேயர்.லியாகத் அலி, பொது மேலாளர் (த.அ.போ.க.) முகமதுநாசர், துணை மேலாளர்கள் ஜேசுராஜ் (வணிகம்),சுரேஷ் பார்த்திபன் (தொழில் நுட்பம்), மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: