×

ஆற்காடு அருகே ரூ.35 கோடியில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி

*அமைச்சர் ஆர்.காந்தி நேரடி ஆய்வு

ஆற்காடு : ஆற்காடு அருகே ரூ.35 கோடி மதிப்பீட்டில் பைபாஸ் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிப்படைந்தனர்.

இதனால் பைபாஸ் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேற்கண்ட கோரிக்கையை ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசி வந்தார்.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் துறையின் சார்பில் சுமார் 3.46 கிமீ நீளத்திற்கு ஆற்காடு அடுத்த தாஜ்புராவிலிருந்து வேப்பூர் வரை பைபாஸ் சாலை அமைக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த ஏப்ரல் 12ம் தேதி அமைச்சர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டிபணிகளை துவக்கி வைத்தார். மேற்கண்ட பைபாஸ் சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தற்போது அங்கு தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. மேற்கண்ட பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். அப்போது ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகர திமுக செயலாளர் ஏ.வி.சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags : Arcot ,Minister ,R. Gandhi ,Ranipet district ,
× RELATED ஆதரவற்றோர்களுக்காக தங்கும் இடத்தை...