குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கம்; தயாரிப்பு நிறுவனத்தின் உத்தரவாதத்தால் வழக்கு முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில், அனுமதியில்லாமல், தனது பாடல்களை பயன்படுத்தியதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக் கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் உரிமையை, சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும், தற்போது இளையராஜா பாடல்களை குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில், இளையராஜாவின் பாடல்களை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Related Stories: