திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. முந்தைய வருடங்களை விட இம்முறை சபரிமலையில் நடை திறந்த அன்று முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது. நேற்று வரை கடந்த ஒரு மாதத்தில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை நெருங்கி உள்ளது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கமாகும். திருவிதாங்கூர் மன்னர் சபரிமலைக்கு காணிக்கையாக வழங்கிய இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. வருடம்தோறும் மண்டல பூஜைக்கு அணிவிப்பதற்காக இந்த தங்க அங்கி இங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படும்.
இவ்வருட தங்க அங்கி ஊர்வலம் வரும் 23ம் தேதி காலை 7 மணிக்கு புறப்படுகிறது. கோழஞ்சேரி, ஓமல்லூர், கோன்னி, பெருநாடு, நிலக்கல் வழியாக 26ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இந்த ஊர்வலம் பம்பையை அடையும்.இங்கு பக்தர்கள் தரிசனம் செய்த பின்னர் சரங்குத்தி வழியாக அன்று மாலை ஊர்வலம் சன்னிதானத்தை அடையும். தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் தங்க அங்கியை ஏற்று வாங்கி ஐயப்பனுக்கு அணிவிப்பார்கள். மறுநாள் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்றுடன் இவ்வருட மண்டல காலம் நிறைவடையும்.
