திரை, இசை, நாடக, நாட்டுப்புற கலைஞர்கள், இலக்கியவாதிகள் என கலைஞர்களை போற்றும் அரசு இது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திரைக் கலைஞர்கள், சின்னத்திரை, இசை, நாடக, நாட்டுப்புறக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் என்று கலைஞர்களை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில், முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் இசை விழாவில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆண்டு திரைப்ட நாயகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1989ம் ஆண்டு கலைஞர் கதை வசனத்தில் நியாயத் தராசு படத்தில் நடித்தார். நாசர் பெரிய நடிகராக வளர்ந்த பிறகு, அவரே குறிப்பிட்டுச் சொன்னார், தென்பாண்டிச் சிங்கம், எங்கள் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வேண்டும் என்று கலைஞர் அழைப்பு விடுத்தபோது, பொதுவாக, சினிமாவில் பிசியாக இருக்கும் போது, டிவி சீரியலில் நடிக்க விரும்பமாட்டார்கள், வர மாட்டார்கள்.

ஆனால், துணிச்சலாக வந்து தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தவர். அதேபோல, கலைஞரின் கதை வசனத்தில் இளைஞன், பாசப்பறவைகள், பொன்னர் சங்கர் என்று பல படங்களில் நடித்த அவர் இன்று கலைஞர் விருதைப் பெறுவது மிக மிகப் பொருத்தம். தகுதி உண்டா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார், நிச்சயமாக சொல்கிறேன், உங்களுக்கு அனைத்துத் தகுதிகளும் உண்டு. அதேபோல, ராஜரத்னா விருதை வடுவூர் எஸ்.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி பெற்றிருக்கிறார். 60 ஆண்டுகளாக, 10 ஆயிரம் மேடைகளில் பங்கெடுத்த கலைமாமணி இவர். இயல்செல்வம் விருது பெறும் திருவாரூர் புலவர் சண்முகவடிவேலன் இந்த அரங்கிற்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை.

யூடியூப் திறந்தாலே அவரை பார்க்காமல் இருக்க முடியாது, நான் கூட இரவில் தூங்கும்பொழுது, அவருடைய பட்டிமன்றத்தை கேட்டுவிட்டு, அவருடைய நகைச்சுவை, கருத்துக்களை கேட்டுவிட்டு தான் சில நேரங்களில் தூங்குவது உண்டு. இசைச் செல்வம் விருதை காயத்திரி வேங்கடராகவன் பெற்றிருக்கிறார். தனது குரலால் அனைவர் மனதையும் ஈர்க்கும் இசைக் கலைஞராக இசையுலகத்தில் தனக்கென தனியிடம் பிடித்திருப்பவர். நாட்டியச் செல்வம் விருதை அனிதா குஹா பெற்றிருக்கிறார். சென்னையில் இருக்கும் மிகப் பிரபலமான பரதநாட்டிய ஆசிரியர்களில் ஒருவராக இருக்கக்கூடியவர்.

நாதஸ்வரச் செல்வம் விருதை திருமெய்ஞானம் சகோதரர்களான ஐயப்பன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் குடும்பமே ஒரு இசைக்குடும்பம். தவில் செல்வம் விருதை நாங்கூர் என்.கே.செல்வகணபதி பெற்றிருக்கிறார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசை கற்று, அங்கேயே 22 ஆண்டுகளாக தவில் பேராசிரியராக இயங்கி வரும் சிறப்புக்குரியவர். மிருதங்கச் செல்வம் விருதை தஞ்சாவூர் கே.முருகபூபதி பெற்றிருக்கிறார். பல தலைமுறைகளாக இசைத் தொண்டாற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர், வட இந்திய இசை மேடைகளிலும் நுழைந்து கலக்கிக்கொண்டு இருக்கிறார். ஒட்டு மொத்தமாக, விருது பெற்றிருக்கக்கூடிய அனைவரையும் பாராட்டுகிறேன்.

திரைக் கலைஞர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் என்று கலைஞர்களை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்காலத் தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள் தான் மிகமிக முக்கியம், கலைஞர்களாகிய நீங்கள், உங்கள் பங்களிப்பை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். எதிர்காலத் தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள் தான் மிகமிக முக்கியம்.

Related Stories: