புதுச்சேரி: புதுச்சேரியில் லாட்டரி அதிபர் மகன் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியை மும்மத வழிபாட்டுடன் தொடங்கி உள்ளார். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ், மிஸ்டு கால் மூலம் பாஜவில் இணைந்து பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டுக்கு பின் பாஜவில் இருந்து விலகி, புதுச்சேரியை குறிவைத்து முதல்வர் கனவில், ஜோஸ் சார்லஸ் மக்கள் இயக்கம் என்று ஒரு அமைப்பை தொடங்கி பணத்தை வாரி இறைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். மேலும், தன்னை வலுப்படுத்த மாற்று கட்சியில் உள்ள இன்னாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளை வளைக்கும் பணியில் ஈடுபட்டார். இதில் தற்போது உள்ள ஒரு பாஜ அமைச்சர் மற்றும் சில எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தந்தனர். மேலும், பலர் சார்லஸ் பக்கம் சாய பச்சை சிக்னல் தந்தனர்.
இந்த சூழலில் நேற்று லட்சிய ஜனநாயக கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியை மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கினார். கட்சியின் தலைவராக அவரே செயல்படுகிறார். ஜோஸ் சார்லஸ் தலைமையில் தேங்காய் திட்டு துறைமுகத்தில் இருந்து படகுகளில் சென்ற கட்சியினர், மும்மதத்தை சேர்ந்த குருமார்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்திய பின்னர், கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதில், நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில், கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள், நெற்கதிருடன் எல்ஜேகே என பதியப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பிரான்ஸ் நாட்டின் கொடியை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.
பின்னர், கட்சி பெயரின் 3 எழுத்துகளான ‘எல்ஜேகே’ என்பதை கடல் நடுவே படகுகள் மூலம் வடிவமைத்து நிறுத்தினார். அங்கிருந்து படகு மூலம் பாண்டி மெரினாவில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மேடையின் முன்பு அமைக்கப்பட்ட கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கட்சி துண்டை அணிவித்து வரவேற்றார். முன்னதாக மணக்குளவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை, மிஷன் வீதியில் பேராயரை சந்தித்து ஆசி, காஜியார் வீதியில் மவுலா சாகிப் மசூதியில் சிறப்பு பிரார்த்தனையில் சார்லஸ் ஈடுபட்டார்.
புதிய கட்சி தொடங்கியது ஏன்?
கட்சி தொடங்கிய பின் ஜோஸ் சார்லஸ் பேசுகையில், ‘புதுச்சேரியில் வந்து பணம் சம்பாதிக்க போவதாக சிலர் புரளியை கிளப்பி வருகின்றனர். அந்த அவசியம் எனக்கு ஏற்படவில்லை. அடிப்படை தேவைகளுக்கு கஷ்டப்படும் மக்களுக்காகத்தான் கட்சியை துவங்கியுள்ளேன். வளர்ச்சி அரசியல் மூலமாக உலக வரைபடத்தில் நம்பர் ஒன் சிட்டியாக புதுச்சேரியை மாற்றுவேன். ஊழல் செய்து, எதையும் கண்டு கொள்ளாமல் மக்களை நடுத்தெருவுக்கு ஆட்சியாளர்கள் கொண்டுவந்துள்ளனர். குண்டு சட்டியில் குதிரை ஓட்ட புதுச்சேரிக்கு வரவில்லை. உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஊழலை ஒழித்து சிங்கப்பூர், டென்மார்க் போன்ற நாடாக புதுச்சேரியை மாற்றுவேன்’ என்றார்.
விஜய்யை வழி நடத்துபவர்கள் சரியில்லை: ஆதவ் அர்ஜூனா மீது தாக்குபுதுச்சேரி ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த குழந்தைகள் தின விழா பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளை ஜோஸ் சார்லஸ் வழங்கினார். பின்னர் சார்லஸ் மார்டின் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி போன்ற சிறிய மாநிலத்தை சுலபமாக ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்ற முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற வேண்டும், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எங்களது முதல் குறிக்கோள்.
தவெக தலைவர் விஜய் உடன் இருப்பவர்கள் சரி இல்லை. அவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார், புதுச்சேரியை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கும் விஜய்யுடன் கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டும். அவரை வழிநடத்துபவர்கள் சரியில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. பாதுகாப்புக்கும், பந்தாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் என்னை விமர்சனம் செய்துள்ளார்.
புதுச்சேரியில் பல கொலைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்தான் உள்ளது. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை விட சிறப்பு மாநில அந்தஸ்து தான் தேவை. லட்சிய ஜனநாயக கட்சியில் முன்னுதாரணமாக இருக்கும் இளைஞர்கள், மாற்று கட்சியினர் என அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். உலகிற்கே நாம் முன்மாதிரியாக மாற வேண்டும், உலகின் சிறந்த நகரமாக புதுச்சேரி மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தவெக தலைவர் விஜய்யுடன் இருப்பவர்கள் சரியில்லை என தனது மைத்துநர் ஆதவ் அர்ஜூனாவை மறைமுகமாக குறிப்பிட்டு ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசியுள்ளார்.
