தர்மபுரி: நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜ, சங்பரிவார் இயக்கங்கள் முயற்சித்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மோளையானூரில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜ, சங்பரிவார் இயக்கங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்கு திருப்பரங்குன்றம் ஒரு சான்று.
திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் பல ஆண்டுகளாக ஒற்றுமையோடு, சகோதரத்துவடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், சங்பரிவார் அமைப்புகளை சார்ந்தவர்கள், வேண்டுமென்றே இல்லாத ஒரு பிரச்னையை கூர்தீட்டி, மதுரையிலே மதத்தின் பெயரால் வன்முறைக்கு வித்திடுகிறார்கள். இதற்கு நீதித்துறையை சார்ந்தவர்களும் துணை போகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக நீதிபதி நிலைப்பாடு அல்லது அவர் வழங்கிய தீர்ப்பு, அவருடைய அணுகுமுறை மிகுந்த கவலை அளிக்கிறது. அவரை அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய எதிர்க்கட்சியை சார்ந்த நாங்கள் மக்களவைத் தலைவரிடத்திலே மனு வழங்கி இருக்கிறோம். உடனடியாக சங்பரிவார்கள் கருத்துக்களை ஆதரிக்க கூடிய ஓய்வு பெற்ற பல நீதிபதிகள், நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசிய போது, குறைந்தபட்ச கண்டனத்தை கூட தெரிவிக்காதவர்கள் இப்போது ஜி.ஆர்.சாமிநாதனுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட முன் வந்திருக்கிறார்கள். இந்த கும்பலையும், பாஜ, ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளையும் தமிழ்நாட்டு மக்கள் அம்பலப்படுத்துவார்கள், விரட்டி அடிப்பார்கள். அதற்கு இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும் என்று பெரிதும் நம்புகிறேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம். ஒன்றிய அரசு தான் அதை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது அரசமைப்புச் சட்டப்பூர்வமான கணக்கெடுப்பாக அமையும். மாநில அரசுகள் எடுத்தால் அது வெறும் சர்வே. ஒன்றிய அரசு எடுத்தால் அது சென்சஸ். எனவே, ஒன்றிய அரசு தான் இதை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு திருமாவளவன் எம்.பி. கூறினார்.
