கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

 

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விஜயிடம் விரைவில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தவெக மாநில பொது செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை சிபிஐயிடம் அளித்தனர். தொடர்ந்து பலியானவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர், போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், டாக்டர்கள், மின்வாரியம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்களை வரவழைத்து விசாரித்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் விரைவில் தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சிபிஐ அதிகாரிகள் தற்போது தொடங்கி உள்ளார்களாம். விஜய்யை கரூருக்கு அழைத்து விசாரணை நடத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால், அவரிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Related Stories: