×

அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தமிழ்நாடு மாநில கலைத்திட்ட வடிவமைப்பு குழுவின் கூட்டம்: துணை தலைவர், உறுப்பினர்கள் ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு மாநில கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துணை தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025ன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக்குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் 24ம் தேதி நடந்தது. தொடர்ந்து தமிழ்நாடு மாநிலக் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் கூட்டம், நேற்று சென்னை, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி உயர்மட்டக் குழுவின் துணைத் தலைவர் சந்தரமோகன், இதுவரை நடந்துள்ள கலைத்திட்ட, பாடத்திட்ட பணிகள் குறித்தும் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும் எதிர்கால படிப்பிற்கு வழிகாட்டும் வகையிலும் பாடநூல்கள் அமைந்திட உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், பாடத்திட்டம், பாடநூல்கள் எளிய மொழி நடையிலும் வகுப்பு மற்றும் வயது நிலைக்கேற்ற குறைவான பாடப்பகுதிகளைக் கொண்டும் அமைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கருத்துகளை எடுத்துரைத்தார். இன்றைய குழந்தைகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பரிந்துரைகள் கலைத்திட்டக் குழு வல்லுநர்களால் கூறப்பட்டன.

கலைத்திட்டக் குழு உறுப்பினர்களான இயற்பியல் வல்லுநர் ரீட்டா ஜான், முன்னாள் இணைப் பேராசிரியர் சுதந்திரமுத்து, தாவரவியல் வல்லுநர் மதிவாணன், வரலாற்று வல்லுநர் அசோகன், ஆங்கில மொழி கற்பித்தல் வல்லுநர் உமா ராமன், கணிதவியல் வல்லுநர் மஹாவீர், புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் மணியம் செல்வன், கல்வியாளர் சந்தன தேவன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதிலிப் ஆகியோர் கலந்துகொண்டு அனைத்து பாட கலைத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களில் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் முறை, பாடப்பகுதிகள், மதிப்பீட்டு முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தனர்.

கூட்டத்தில் கலைத்திட்ட உறுப்பினர் செயலரான மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா வரவேற்புரை வழங்கினார். இணை இயக்குநர் புகழேந்தி கூட்டக் கருத்துகளை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu State Curriculum Design Committee ,Minister ,Anbil Mahesh ,Chennai ,School Education Department ,Tamil Nadu State Curriculum Design Committee for School Education… ,
× RELATED டிஎஸ்பியை கைது செய்யுமாறு உத்தரவு...