பாரபங்கி: உபியில் யூடியூப்பை பார்த்து போலி டாக்டர் தவறான அறுவை சிகிச்சை செய்ததால் இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உபி மாநிலம்,பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் தேஹ்பகதூர் ராவத். இவருடைய மனைவி முனிஷ்ரா ராவத்துக்கு வயிற்றில் கடும் வலி இருந்துள்ளது. இதையடுத்து, கோத்தியில் உள்ள கிளினிக்குக்கு சென்றார். கிளினிக்கை நடத்தி வந்த கியான் பிரகாஷ் மிஸ்ரா முனிஷ்ராவை சோதித்து விட்டு சிறுநீரக கல்லினால் இந்த வலி ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை செய்தால் சரியாகி விடும் என கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு மொத்தம் ரூ. 25,000 செலவாகும் என்று மிஸ்ரா கூறியுள்ளார். இதனை நம்பிய தேஹ்பகதூர் கடந்த 5ம் தேதி அறுவை சிகிச்சைக்காக முன் பணமாக ரூ.20,000 கொடுத்துள்ளார். இதையடுத்து இளம் பெண்ணுக்கு கியான் பிரகாஷ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்கு அடுத்த நாள் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேஹ்பகதூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், போலி டாக்டரான கியான் பிரகாஷ் சட்டவிரோதமாக கிளினிக் நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடும் போதையில் இருந்த அவர் யூடியூப்பை பார்த்து அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சையின் போது பல நரம்புகள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் முனிஷ்ரா உடல் நிலை மோசமடைந்து கடந்த 6ம் தேதி உயிரிழந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கியான் பிரகாஷ் மற்றும் அவரது உறவினர் விஜய் குமார் மிஸ்ரா, அவரது நெருங்கிய உறவினர் விவேக் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் அதிகாரி கூறுகையில் இளம் பெண் மரணம் சம்மந்தமாக போலி டாக்டர் கியான் பிரகாஷ்,விவேக் குமார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
