பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான நேற்று வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் இதை தாக்கல் செய்தார். இந்த புதிய மசோதாவின்படி மொழி, ஜாதி, மதம், பிறந்த இடம், ஆண், பெண் மீது வெறுப்பை உமிழும் வகையில் ஒரு நபரின் பேச்சு அமைந்து இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் அல்லது குழுவை சேர்ந்தவர்களுக்கு குறைந்தது 2 வருடம் முதல் அதிக அளவாக 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். முதல் முறை இவ்விதம் நடந்து கொண்டால் ஒரு வருடம் வரை 7 வருடம் சிறைத்தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மேடையில் மட்டும் இன்றி சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சு மற்றும் பதிவுகள் பதிவிட்டாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட பேரவையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.
