×

உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு நிர்வாகப் பயிற்சி: அமைச்சர் கோவி. செழியன் துவங்கி வைத்தார்

சென்னை: அரசு கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கான நிர்வாகப் பயிற்சியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் துவங்கி வைத்தார். அரசு கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் முதல்வர்கள், பொறுப்பு முதல்வர்கள், இணை இயக்குநர்களுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட நிர்வாகப் பணியினை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு நிர்வாகப் பயிற்சி, அணிக்கு 40 நபர்கள் வீதம் 6 அணிகளுக்கு அண்ணா மேலாண்மை நிறுவனம் வாயிலாக 4 நாட்களுக்கு வழங்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் 2025-26ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்தார்.

இதனை செயல்படுத்திடும் வகையில், நிர்வாகப் பயிற்சி அளிப்பதற்கென ரூ. 16 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இப்பயிற்சியின் வாயிலாக கல்லூரிக் கல்வித் துறையைச் சார்ந்த 175 முதல்வர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 65 முதல்வர்கள் என மொத்தம் 240 நபர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கான நிர்வாகப் பயிற்சியினை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், உயர்கல்வித் துறை செயலாளர் சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister Gov. ,Cheliyan ,Chennai ,Minister ,Gov. ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...