×

படுத்த படுக்கையாக இருந்த 89 வயது மூதாட்டிக்கு ரூ.3000 பொங்கல் பரிசு: வீட்டுக்கே சென்று வழங்கிய ரேஷன் ஊழியர்கள்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மைக்குடியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி இருளாயி (89). கணவரை இழந்த இவர், சில மாதங்களாக நோயுற்று படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கனை உறவினர்கள் அவருக்கு வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால், அவரால் ரேஷன் கடைக்கு சென்று வாங்க முடியாது என்பதால், மைக்குடி ரேஷன் கடை ஊழியர்களிடம் சென்று இருளாயியின் நிலையை தெரிவித்தனர்.

விற்பனையாளர் நாகராணி தங்களது துறை உயரதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். பின்பு நேற்று முன்தினம் இரவு நாகராணி மற்றும் வட்டவழங்கல் துறை ஊழியர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று மூதாட்டி இருளாயியிடம் கைரேகை பெற்று தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரத்தை மூதாட்டியின் கைகளில் ஒப்படைத்தனர்.

அதேபோல் கரும்பு, அரிசி, சர்க்கரை மற்றும் வேட்டி சேலையும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனை பெற்று கொண்ட இருளாயியின் உறவினர்கள், கிராம மக்கள் தமிழக அரசுக்கும், ரேஷன் ஊழியர்களுக்கும் நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags : Thirumangalam ,Maikudi ,Madurai district ,Irulayi ,
× RELATED மாமல்லபுரத்தில் கல்வி சுற்றுலா புராதன சின்னங்களை கண்டு ரசித்த மாணவர்கள்