சென்னை: 49வது சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வரும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான வாசகர்கள் குடும்பம் குடும்பமாகக் குவிந்தனர். இதனால், புத்தகக் காட்சி களைகட்டியது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49வது சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 8ம் தேதி தொடங்கி வைத்தார். இது வரும் 21ம் தேதிவரை நடக்கிறது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள 1000 அரங்குகளில் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், அரசியல், சிறார் மற்றும் குழந்தைகள் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு வகைமைகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இடம்பெற்றுள்ள லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்றைய தினம் விடுமுறைநாள் என்பதால், ஏராளமான வாசகர்கள் குடும்பத்துடன் புத்தகக் காட்சிக்கு வந்து தங்களுக்கு தேவையான நூல்களை வாங்கிச் சென்றனர். சில அரங்குகளும் வசதிகளும் வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், முதல்முறையாக அரங்கு எண் 673ல் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் தனி அரங்கு அமைக்கப்பட்டு, அஞ்சல் துறையில் வழங்கப்படும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, புத்தகக் காட்சியில் வாசகர்கள் வாங்கும் புத்தகங்களை, அவர்கள் விரும்பும் முகவரிக்கு காட்சி அரங்கில் இருந்தே அஞ்சல் மூலம் பாதுகாப்பாக அனுப்பலாம். அதேபோல், பொதுமக்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய தனிப்பட்ட தபால் தலைகளை ரூ.300 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் ‘மை ஸ்டாம்ப்’ வசதியும் உள்ளது.
மேலும், அஞ்சல் துறையில் உள்ள சேமிப்புத் திட்டங்கள், விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகிய சேவைகளைப் பற்றிய தகவல்களைப் பெற்று பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதுதவிர ஆதார் தொடர்பான சேவைகளை வழங்கும் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆதார் பதிவு, புதுப்பித்தல், திருத்தம் உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
* ‘இலவச போக்குவரத்து வசதி’
புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களின் வசதிகாக, முதன்முறையாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலிருந்து சைதப்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரையில் இலவச சிற்றுந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* அரங்கு எண் 13, 14ல் சூரியன் பதிப்பகம்
புத்தகக் காட்சியில் 13 மற்றும் 14ம் எண் அரங்கில் சூரியன் பதிப்பகத்தின் நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த அரங்கில் மாநில சுயாட்சி, திராவிட இயக்க வரலாறு தொடங்கி பல்வேறு அரசியல் நூல்களும், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு வகைமைகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நேற்று ஏராளமான வாசகர்கள் சூரியன் பதிப்பக அரங்கில் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
