வேலூர்: வேலூர் தினகரன் நாளிதழ் மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான ‘‘வெற்றி நமதே’’ கல்வி நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர், விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பங்கேற்றனர்.
வேலூரில் தினகரன் நாளிதழும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து ‘வெற்றி நமதே’ கல்வி நிகழ்ச்சியை வேலூர் விஐடி அண்ணா அரங்கில் நேற்று நடத்தின. நிகழ்ச்சியில் சென்னை தினகரன் செய்தி ஆசிரியர் எஸ்.மனோஜ்குமார் வரவேற்று பேசினார். விஐடி பல்கலைக்கழக நிறுவனரும், வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், ஏற்றத்தாழ்வுகளை குறைக்க கல்வியால் மட்டுமே முடியும் என்று கூறினார்.
விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் துவக்க உரையாற்றினார். சேகர் விசுவநாதன், உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் கணித பாடம் தொடர்பாக செல்வலக்ஷ்மி, வேதியியல் பாடத்திற்கு பத்மலோசனி, இயற்பியல் பாடத்திற்கு ஸ்ரீபிரியா, உயிரியல் பாடத்திற்கு ஆதியப்பன் ஆகியோர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான முக்கிய கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து உயர்கல்வி இயற்பியல் துறை தொடர்பாக என்.அருணை நம்பிராஜ், ஓட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மைத்துறைக்கு டி.ஜேசு பிரெட்ரிக், அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை தொடர்பாக சுந்தர்ராஜ் ஆகியோர் பேசினர். வேலூர் தினகரன் பொது மேலாளர் டி.தயாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கவிஞர் லக்குமிபதி தொகுத்து வழங்கினார்.
அனைத்து மாணவர்களுக்கும் குளிர்பானம், தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் குறிப்புகள் எடுக்க நோட்பேட், பேனா ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், பொதுத்தேர்வுக்கான வினா- விடை தொகுப்பு புத்தகம் தினகரன் சார்பில் வழங்கப்பட்டது. இதனை பெற்ற மாணவ, மாணவிகள் தினகரன் நாளிதழின் இப்புத்தகம் நிச்சயம் எங்களுக்கு ெபரிதும் பயனளிக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
