வேலூர், ஆக.20: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி வியாபாரியிடம் ரூ.5.31 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி, கழிஞ்சூரை சேர்ந்தவர் அருண்குமார் (41). சாலையோரம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை பார்த்துள்ளார். இதைக்கண்ட அருண்குமார் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த வெப்சைட்டை திறந்து பார்த்துள்ளார். அப்போது, அருண்குமார் செல்போன் எண்ணை வாட்ஸ் அப் குரூப்பில் சேர்த்து அதிக பணம் பெற்றவர்களின் விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தனர். இதனை உண்மை என நம்பிய அருண்குமார் கடந்த மாதம் 21ம் தேதியிலிருந்து கடந்த 7ம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சத்து 31 ஆயிரத்து 300ஐ ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தார். அருண்குமார் முதலீடு செய்த பணத்திற்குரிய லாபம் கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு கேட்டார். அவர்கள் மேலும் பணம் முதலீடு செய்தால் லாபம் கிடைப்பதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
