‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தில் பூர்த்தி செய்ய படிவங்கள் காட்பாடியில் கலெக்டர், எம்பி தொடங்கி வைத்தனர் வேலூர் மாவட்டத்தில் 3.92 லட்சம் குடும்பங்களுக்கு

வேலூர், ஜன.10: வேலூர் மாவட்டத்தில் உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில் வீடு வீடாக சென்று 3.92 லட்சம் குடும்பங்களுக்கு படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து பெற உள்ளதாக தொடக்க விழாவில் கலெக்டர் சுப்புலட்சுமி பேசினார்.
திருவள்ளுர் மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த திட்டம் நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். எம்பி கதிர்ஆனந்த் முன்னிலை வகித்தார். தொடர்ந்து ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், படிவங்களை தன்னார்வலர்களுக்கு கலெக்டர், எம்பி வழங்கி தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து கலெக்டர் சுப்புலட்சுமி பேசியதாவது: உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில், தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளில் உள்ள 3 லட்சத்து 92 ஆயிரத்து 768 குடும்பத்தினருக்கு வீடு, வீடாக தன்னார்வலர்கள் செல்ல வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் அரசின் மூலம் பலன் அடைந்துள்ளது குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். இதற்காக வேலூர் மாவட்டத்தில இல்லம் தேடி கல்வி திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 1000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொருவருக்கும் 500 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அவர்கள் குறைந்தபட்சம் 30 வீடுகளுக்கு சென்று, இந்த படிவம் வழங்கவேண்டும். பின்னர் அவர்களின் தேவையை கேட்டறிந்து அந்த படிவத்தை பூர்த்தி செய்தவுடன் அதனை பெறவேண்டும். பின்னர் ‘ஆப்ஸ்’ மூலம் பதிவேற்றவேண்டும். அவ்வாறு படிவம் செய்த பின்னர் அடையாள அட்டை வழங்கவேண்டும். அதாவது தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர், உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோர வேண்டும்.

தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம். செயலியில் பதிவேற்றம் செய்ய 948 தன்னார்வலர்கள் மற்றும் 345 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மகளிர் திட்ட இயக்குநர் பாலமுருகன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: