ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கு அரசு துரித நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு: 8 வாரத்தில் இறுதி அறிக்கை தர சிபிசிஐடிக்கு உத்தரவு

மதுரை: கவின் ஆணவ படுகொலை வழக்கில் அரசு தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டிய ஐகோர்ட் கிளை, இறுதி விசாரணை அறிக்கையை 8 வாரத்திற்குள் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் பொன்.காந்திமதிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லையில் ஐடி மென்பொறியாளர் கவின் ஆணவ கொலை தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடியினர் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் கொலை செய்த சுர்ஜித்தும், தந்தையும் கைதான நிலையில், தாயார் இதுவரை கைது செய்யப்படவில்லை. கவினை, ஏற்கனவே இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மிரட்டியதாக கவினின் தந்தை புகார் அளித்துள்ளார். இருப்பினும் அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை.

வழக்கை விசாரிக்கும் அதிகாரியும் சுர்ஜித்தின் சமூகத்தை சேர்ந்தவர். எனவே, நெல்லை மாவட்ட நீதிபதி கண்காணிப்பின் கீழ் சிபிசிஐடி வழக்கை விசாரிக்கவும், கவினின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்குமாறும், ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்றுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘கொலை சம்பவம் மதியம் 2.30 மணியளவில் நடந்தது. மாலை 5 மணிக்கு புகார் பெறப்பட்டு, 7.30 மணிக்கு சுர்ஜித் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 3 செல்போன்கள், 7 சிசிடிவி காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எஸ்.சி-எஸ்.டி பிரிவின் கீழ் ரூ.6 லட்சம் கவினின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.6 லட்சம் விரைவில் வழங்கப்படும். விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது’’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘‘இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவைப்படும்’’ என்றனர். அப்போது சிபிசிஐடி தரப்பில், 2 மாத கால அவகாசம் வேண்டும் என கூறப்பட்டது.

மனுதாரர் வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜராகி, ‘‘சுர்ஜித்தின் தாயார் இதுவரை கைது செய்யப்படவில்லை. பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஏற்கனவே சாதி ரீதியாக செயல்படுவதாக புகார் எழுந்ததால் தான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இடத்தில் கலெக்டர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இதுவரை ஆய்வு செய்யவில்லை. எனவே, மாவட்ட நீதிபதி விசாரணையை கண்காணிக்கவும், ஆணவ படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டமும் இயற்ற வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை. சிபிசிஐடியின் விசாரணை குறித்து எந்த புகாரும் இல்லை. எனவே, மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அதன் விபரத்தை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கலாம். தவறு செய்தவர்கள் தப்பிக்க கூடாது என்பதால், சிபிசிஐடி விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை 8 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை 2 மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: