சென்னை: பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராதிகா ஆப்தே (40), தமிழில் `தோனி’, `ஆல் இன் ஆல் அழகுராஜா’, `வெற்றிச்செல்வன்’, `கபாலி’, ‘சித்திரம் பேசுதடி 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த வயலின் கலைஞர் பெனடிக்ட் டெய்லர் என்பவரை 2011ம் ஆண்டு காதல் திருமணம் செய்த அவர், 2024ல் ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார். இந்நிலையில், அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அது வருமாறு:
திரையுலகில் சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, அவர்களின் உண்மையான முகத்தை நான் தெரிந்துகொண்டேன். அவர்கள் மோசமானவர்கள். இனிமேல் அவர்களுடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று முடிவு செய்தேன். அவர்களின் பெயர்களை வெளியே சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். பிறகு கடுமையான பண நெருக்கடி யில் இருந்தபோது, தென்னிந்திய படங்களில் நடிக்க சென்றேன். அங்கும் சில மோசமான அனுபவங்களை சந்தித்தேன். உண்மையிலேயே எனக்கு அப்போது பணம் தேவைப்பட்டது. தென்னிந்தியாவில் பல நல்ல படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், நான் பணியாற்றிய சில படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் எனக்கு சில தர்மசங்கடமான அனுபவங்கள் ஏற்பட்டது.
ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் மட்டுமே பெண்ணாக இருந்த நிலையில், என்னைச்சுற்றி ஆண்கள் இருந்தபோது அது நடந்தது. படத்தில் எனது மார்பகங்கள் மற்றும் பின்புறம் எடுப்பாக தெரிவதற்காக, பேடுகள் வைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டேன். இதை அவர்கள் என்னிடம் சொல்லும்போது, எனக்கு ஒருமாதிரியாக இருக்கும். உங்கள் வீட்டிலுள்ள தாய், தங்கையிடம் இப்படித் தான் சொல்வீர்களா என்று கேட்க தோன்றும். அவர்கள் சொன்ன விஷயங்கள் எனக்கு அதிக வருத்தத்தை கொடுத்தது. எனக்கு மேனேஜரோ, ஏஜெண்ட்டோ இல்லை. டீம் முழுவதும் ஆண்களே இருந்தனர். பெண்களே இல்லாத நிலையில், அவர்கள் என்னை அப்படி செய்ய சொன்னது உச்சக்கட்ட பாகுபாடு. நான் தைரியமானவள் என்றாலும், அதை நினைத்தாலே இதயம் படபடக்கிறது. மீண்டும் அந்த நிலைமை
ஏற்பட்டால் நான் அழுதுவிடுவேன். எந்த பெண்ணும் இந்த நிலைக்கு ஆளாகக்கூடாது.
