- அஇஅதிமுக
- அண்ணாநகர்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- சென்னை
- திமுக அரசு
- சட்டப்பேரவை
- சென்னை அண்ணாநகர்…
- தின மலர்
சென்னை: திமுக அரசை பொறுத்தவரையில், எந்த கட்சியாக இருந்தாலும், ஏன் காவல் துறையாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று, சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கில் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: அண்ணாநகரிலே நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக சில உறுப்பினர்கள் இங்கே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அண்ணாநகர் வழக்கை பொறுத்தவரையில், 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களது உறவினரான இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி தங்களை தவறாக நடத்தியதாகவும், குற்றம் செய்த சதீஷ் என்பவரை கைது செய்யவில்லை என்றும் சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, இந்த வழக்கு கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு மாற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்படுகிற சதீஷும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இந்த உத்தரவை எதிர்த்து காவல்துறை செய்த மேல்முறையீட்டில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்ற முடிவிற்கு வந்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு காவல் துறையில் இருந்தே 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு இப்போது இந்த வழக்கில் அதிமுக-வைச் சேர்ந்த 103வது வட்ட செயலாளர் சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜீவையும் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தியுள்ளது.
சுதாகர் அதிமுகவில் வட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். அவரையும் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். காவல் ஆய்வாளர் பொறுப்பில் இருக்கிற ஒருவரையும் கைது செய்திருக்கிறார்கள். நான் முன்பு விளக்கம் சொல்லிய சென்னை மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் – நிச்சயமாக, உறுதியாகச் சொல்கிறேன். அவர் திமுக-வில் உறுப்பினராக இல்லை. திமுக ஆதரவாளர். அதை நாங்கள் மறுக்கவில்லை. அமைச்சர்களுடன், அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால், யாராக இருந்தாலும், திமுகவினராக இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
எந்த கட்சியாக இருந்தாலும், எந்த தனிப்பட்ட நபராக இருந்தாலும் சரி, ஏன் காவல் துறையாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, நாங்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆகையால், எதிர்க்கட்சி நண்பர்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, குற்றச்செயல் எதுவாக இருந்தாலும், குற்றவாளி யாராக இருந்தாலும், நேர்மையாக, நியாயமாக, கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் இந்த அரசை குறை கூறாமல், பெண்களின் பாதுகாப்பிற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை நீங்கள் அனைவரும் இந்த அரசுக்கு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* அதிமுக குற்றச்சாட்டுக்கு துரைமுருகன் பதில்..
சட்டப்பேரவையில் நேற்று அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் பாலியல் சம்பவம் நடைபெறாத நாளே இல்லை என்ற நிலை உள்ளது” என்று கூறினார். இதற்கு பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் மட்டுமல்ல டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட எல்லா மாநிலத்திலும் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது. சட்டத்தை மீறுகிறவர்கள் எல்லா மாநிலத்திலும் இருக்கிறார்கள். நம்ம பொள்ளாச்சியில் என்ன நடந்தது?” என்றார்.
The post அண்ணாநகர் சிறுமி பலாத்கார வழக்கில் அதிமுக நிர்வாகி கைது எந்த கட்சியாக இருந்தாலும் பெண்களின் பாதுகாப்புதான் முக்கியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.