×

பிளாஞ்சேரி சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு பஞ்சமி தின மகா அபிஷேகம்

 

கும்பகோணம், ஜன.6: கும்பகோணம் அருகே பிளாஞ்சேரி சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு பஞ்சமி தின மகா அபிஷேக வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்று தேங்காய் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு தனி கோயில் கொண்டு சிம்ஹாருட வாராகி அம்மன் அருள்பாலிக்கிறார். இங்கு பஞ்சமி தினத்தை முன்னிட்டு சிம்ஹாருட வாராஹி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் என 16 வகையான வாசனாதி திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும், சிறப்பு ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது. இந்த சிறப்பு அபிஷேக பூஜைகளை ஆலய அர்ச்சகர் கண்ணன் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிம்ஹாருட வாராஹி அம்மனை வழிபட்டனர்.
மேலும், வாழை இலையில் பச்சரிசி கொட்டி அதில் தேங்காய் நெய் தீபம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பஞ்சமி தின வழிபாடு ஏற்பாடுகளை ஆலய பரம்பரை அறங்காவலர் சரபசூலினி உபாசகர் நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post பிளாஞ்சேரி சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு பஞ்சமி தின மகா அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Panchami ,Dina Maha Abhishekam ,Goddess ,Simharudavaragi Amman ,Blancheri ,Kumbakonam ,Kailasanathar Swamy Temple ,Kamakshi Amman ,Kumbakonam… ,Dinakaran ,
× RELATED அம்மாப்பேட்டை வீரமா காளியம்மன்...