தஞ்சாவூர், ஜன. 8: தஞ்சையில் முட்டை விலை கடந்த ஒரு மாதத்தில் ரூ.1 குறைந்து தற்போது ஒரு முட்டை ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சைக்கு நாமக்கல் மற்றும் கந்தர்வக்கோட்டையில் உள்ள பண்ணைகளில் இருந்து தினமும் முட்டை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக தஞ்சைக்கு ஒரு நாளைக்கு 3 லட்சம் வரையிலான முட்டைகள் லாரிகளில் எடுத்து வரப்படும். கடந்த மாதம் 590 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து தற்போது 480 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டது. சில்லறை கடைகளில் கடந்த மாதம் ஒரு முட்டை ரூ.7க்கு விற்பனையானது. கொள்முதல் விலை குறைந்து விட்டதால் தற்போது விலை குறைந்து ரூ.6க்கு விற்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் ரூ.1 மட்டுமே விலை குறைந்துள்ளது. முட்டை மொத்த விற்பனை கடைகளில் நேற்று ஒரு முட்டை ரூ.4.80 என விலை நிர்ணயிக்கப்பட்டு, 30 முட்டைகள் கொண்ட ஒரு அட்டை ரூ.144க்கு விற்கப்பட்டது. இது குறித்து தஞ்சை முட்டை மொத்த வியாபாரி கூறுகையில், கடந்த சில நாட்களாகவே முட்டை கொள்முதல் விலை குறைந்த வண்ணம் உள்ளது. வெளிநாட்டிற்கு அனுப்பும் முட்டையின் ஏற்றுமதி குறைந்ததாலும், முட்டை உற்பத்தி அதிகரித்ததாலும் விலை குறைந்துள்ளது. இருப்பினும் தஞ்சையில் விற்பனை மந்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தஞ்சையில் முட்டை விலை ₹6-க்கு விற்பனை appeared first on Dinakaran.