ஆவடி, ஜன. 5: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023ம் ஆண்டைவிட 2024ல் கொலை சம்பவங்கள் 20 சதவீதம் குறைந்துள்ளது என்றும், 232 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023ம் ஆண்டை விட, 2024ம் ஆண்டு குற்ற சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளன. 2024ம் ஆண்டு 20 சதவீதம் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. இதேபோல் ஆதாயக்கொலை, கொலை முயற்சி, கலவரம், வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களும் வெகுவாக குறைந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் குறைந்துள்ளன.
ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட போலீசார், களப்பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, ரவுடிகள் நடமாட்டம் அதிகமுள்ள செங்குன்றம் போன்ற பகுதிகளில் ரவுடிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், கொலை வழக்குகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 2023ம் ஆண்டு, செங்குன்றம் சரகத்தில் மொத்தம் 18 கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 8 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், நுண்ணறிவுத் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு ஒரு சிறப்பு பிரிவு ஆவடி காவல் ஆணையரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ரவுடிகள் மீதான நிலுவை வழக்குகளில், அவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துகின்ற வகையில், காவல்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சொத்து சம்பந்தமான குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, குற்ற செயல்கள் நடக்கும் பகுதிகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்-ரோந்து பணிகள் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம், சொத்து சம்பந்தமான வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளன. இதேபோல் 2024ம் ஆண்டில், மொத்தம் 232 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆணையரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
The post ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023ம் ஆண்டைவிட 2024ல் கொலை சம்பவங்கள் 20% குறைவு: 232 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு appeared first on Dinakaran.