×

புறநகர் ரயில்கள் ரத்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மாதவரம், ஜன.5: கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இன்று புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று நடைமேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4 வரை செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

The post புறநகர் ரயில்கள் ரத்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Suburban ,Madhavaram ,Municipal Transport Corporation ,Beach-Tambaram route ,Tambaram railway ,Dinakaran ,
× RELATED பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான...