×

பூந்தமல்லி அருகே கண்டெய்னரில் கடத்தப்பட்ட 6.5 டன் குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே கண்டெய்னரில் கடத்தப்பட்ட 6.5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்டெய்னர்களில் குட்கா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து ஆவடி காவல் ஆணையரக மதுவிலக்கு தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சோதனைச் சாவடி அருகே நேற்று தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி வந்த கார் மற்றும் கண்டெய்னரை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து நசரத்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (27), அவரது உதவியாளர் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த குமார் (44), லாரி உரிமையாளரான அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த கனகலிங்கம் (38) என்பது தெரியவந்தது.

இதில் கனகலிங்கம் கட்கா கடத்தலில் முக்கியப் புள்ளியாக இருந்துள்ளார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 6.5 டன் குட்கா, கார் மற்றும் கண்டெய்னர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை ஆவடி காவல் ஆணையரக ஆணையர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு குட்காவை பிடித்த போலீசாரை பாராட்டினார்.

இவர்கள் பெங்களூருவில் இருந்து மொத்தமாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வாங்கிவந்து பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக கொடுத்தது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனகலிங்கம் குட்கா கடத்தி வந்த சம்பவத்தில் பூந்தமல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் குட்காவை கடத்தி வந்து போலீசிடம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து குட்கா கடத்தலில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுபோன்று குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விநியோகம், கடத்தல் மற்றும் விற்பனைக்கு முக்கியப் புள்ளியாக செயல்படும் நபர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post பூந்தமல்லி அருகே கண்டெய்னரில் கடத்தப்பட்ட 6.5 டன் குட்கா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Poonamalli ,Avadi Police Commissionerate ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட...