சென்னை: வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள மையங்களில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கு வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்று விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் போதிய மருத்துவ வசதி இல்லாமல் 20 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதால் நோய்வாய்ப்படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க சர்வதேச தரத்தில் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள் கொண்ட மருத்துவ வசதியை ஏற்படுத்தக் கோரி வனவிலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், கைவிடப்பட்ட குட்டி யானைகளை ஒன்றாக பராமரித்து பின் அவற்றை குழுவாக வனத்துக்குள் விட வேண்டும். வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மையங்கள் சில இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
அங்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கால்நடை மருத்துவர்கள் பணியிடங்கள் ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா? அந்த மருத்துவர்களுக்கு வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா? இந்த மையங்களில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் எத்தனை? என்பன குறித்த விபரங்களை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். கைவிடப்படும் குட்டி யானைகளை குழுவாக வளர்த்து பின்னர் வனத்தில் விடும் கோரிய கோரிக்கை தொடர்பாகவும், காட்டு நாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களில் கால்நடை மருத்துவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா? தமிழக அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.