×

எங்களுக்கு நல்லகண்ணு தொடர்ந்து வழிகாட்டிட வேண்டும் 200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும் என்றும், வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலையில் 200 அல்ல, 200யும் தாண்டி வெற்றி பெறும் வகையில் திமுக கூட்டணி அமைந்துள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று நடந்தது. விழாவில் நல்லகண்ணு கட்சிக் கொடி ஏற்றி, கட்சியின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, நல்லகண்ணுவுக்கு பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவர் சிலை மற்றும் புத்தகத்தை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்எல்ஏக்கள் தி.ராமச்சந்திரன், அப்துல் சமது, இந்திய கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர்கள் வீரபாண்டியன், பெரியசாமி, ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டு நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. நம்மைப் பொறுத்தவரையில் இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை. அப்படிப்பட்ட பெரும் வாய்ப்பையும், சிறப்பான வாய்ப்பையும், அரிய வாய்ப்பையும் பெற்றிருக்கக்கூடிய நல்லகண்ணுவை நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். நல்லகண்ணு அமைதியாக, அடக்கமாக அதே நேரத்தில் ஆழமாக எதையும் சிந்தித்து வெளிப்படுத்தக் கூடியவர். அப்படிப்பட்ட நல்லகண்ணுவை உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகிறேன்.தொடர்ந்து நீங்கள் இருந்து எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும், துணை நிற்கவேண்டும் என்று திமுகவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் இன்றைக்கு தமிழகத்தில் அமைந்திருக்கக்கூடிய மதச் சார்பற்ற கூட்டணி அமைப்பினுடைய தலைவர்கள் சார்பில் நான் அன்போடு அவரை கேட்டுக் கொண்டு நமது முத்தரசன் பேசுகின்றபோது சொன்னார்; நான் செயற்குழுவில் பேசிய அந்தப் பேச்சை கோடிட்டுக் காட்டி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னதாக எடுத்துச் சொன்னார். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்ன என்று கேட்டால், 200 அல்ல, 200யும் தாண்டி வெற்றி பெறும் வகையில் திமுக கூட்டணி அமைந்திருக்கிறது. 7 ஆண்டு காலமாக இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. தேர்தல் களத்தில் நின்று தொடர்ந்து வெற்றியைப் பெற்று வருகிறோம். ஆகவே, இந்த கூட்டணியைப் பொறுத்தவரைக்கும், கொள்கை கூட்டணி மட்டுமல்ல, இது நிரந்தரக் கூட்டணி என்பதை இந்த நேரத்தில் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி, அதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்கவேண்டும். உங்கள் அனைவரின் சார்பிலும், திமுக சார்பிலும், நல்லகண்ணு வாழ்ந்து நமக்கு வழிகாட்டிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர் – முதல்வர் உத்தரவு
நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டிடம் அமைக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் தோழர் இரா.நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும் வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் அமைய இருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டிடத்திற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டிடம்” எனப் பெயரிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

The post எங்களுக்கு நல்லகண்ணு தொடர்ந்து வழிகாட்டிட வேண்டும் 200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள்,...