×

ஆளுநர் சொல்வதற்காக சட்டமன்ற மரபுகளை எல்லாம் மாற்றமுடியாது: சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. வழக்கம் போல பேரவைக் கூடியதும், ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்பட்டதும் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென, ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருநது வெளியேறினார். சட்டப்பேரவையில் நாளை காலை ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது.

தொடர்ந்து. வரும் 11ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு; அண்ணா பல்கலை. வேந்தரும் ஆளுநருமான ரவி பேச எழுந்தபோது அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். அண்ணா பல்கலை. வேந்தரான ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்களா என்று தெரியவில்லை. கலவர நோக்கத்துடன் அதிமுகவினர் செயல்பட்ட காரணத்தால் வெளியேற்ற உத்தரவிட்டேன். இதுவரை எந்த ஆளுநரும் இப்படிப்பட்ட பிரச்சனையை உருவாக்கியதில்லை.

உரையாற்ற வரும் ஆளுநருக்கு பேரவையில் கருத்து சொல்ல அனுமதி இல்லை. ஆளுநர் உரையாற்றும் நாள், சட்டப்பேரவை நடந்த நாளில் கூட கணக்கில் வராது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் கொடுத்த உரையை ஆளுநர் வாசிப்பது சம்பிரதாயம். தன்னை எதிர்த்து ஜெயலலிதா அரசு நிறைவேற்றிய தீர்மானத்தையும் சேர்த்து வாசித்துவிட்டுச் சென்றார் அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி. தேசிய கீதம் முதலில் பாடததால் உரையை வாசிக்கவில்லை என்று ஆளுநர் சாக்குபோக்கு சொல்கிறார் என்று கருதுகிறேன். தமிழ்நாடு அரசின் உரையை படிக்க ஆளுநருக்கு விருப்பம் இல்லை. சட்டமன்றத்துக்கு என்று ஒரு மரபு உள்ளது.

ஆளுநர் உரையாற்ற வரும்போது இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று நடைமுறை ஏதாவது சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளதா? 1920ல் சென்னை மாகாண சட்டமன்றம் கூடியது முதல் இருக்கும் மரபே தற்போதும் பின்பற்றப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்ற பிரச்னை இல்லை. ஆளுநர் சொல்வதற்காக சட்டமன்ற மரபுகளை எல்லாம் மாற்றமுடியாது. விதிமீறல், சட்டமீறல்கள் எல்லாம் ஆளுநர் மாளிகைக்கு கைவந்த கலையாக உள்ளது.

இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலத்திலாவது இதுபோன்ற பிரச்சனை இருக்கிறதா? அரசியல் சட்டம் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது, தமிழ்நாட்டு ஆளுநர் பொதுவெளியில் பேசும்போது மதசார்புள்ள நாடு என பேசுகிறார். இந்தியா மதசார்புள்ள நாடு என்று பேசும் ஆளுநர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

The post ஆளுநர் சொல்வதற்காக சட்டமன்ற மரபுகளை எல்லாம் மாற்றமுடியாது: சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Speaker ,Dad ,Chennai ,Assembly ,Tamil Nadu Legislature ,Governor ,R. N. Ravi ,Tamilpthai ,Dad Schematic ,
× RELATED ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை...