- திருவள்ளுவர் சிலை
- விழா
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- திருக்குறள்
- வல்லுவர்...
- திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
சென்னை: கலைஞரால் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகில் உள்ள மிக முக்கியமான அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பள்ளிகள் முதல் உலகிற் சிறந்த பல்கலைக்கழகங்கள் வரை பயன்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வள்ளுவரின் புகழை உலகமெங்கும் கொண்டு செல்ல கலைஞர் சென்னையில் அமைத்த வள்ளுவர் கோட்டத்தோடு நில்லாமல், கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடியில் வானுயர சிலை அமைக்க முடிவு செய்தார்.
குமரியில் சிலை அமைக்க 1975ம் ஆண்டே திட்டமிட்டாலும், அவரது கனவு நினைவாக பல ஆண்டுகள் காலம் ஆனது. 133 அதிகாரங்களை குறிக்கின்ற வகையில் கலைஞர், 133 அடியில் சிலையை உருவாக்குகின்ற பொறுப்பை 1996ம் ஆண்டில் சிற்பி கணபதி ஸ்தபதியாரிடம் ஒப்படைத்தார். செவ்வனே முடிவுற்ற திருவள்ளுவர் சிலையை 2000ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொடங்கும் மணித்துளியில் கலைஞர் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள், தமிழறிஞர்கள் முன்னிலையில் மிகப் பெரிய விழா எடுத்து திறந்து வைத்து, உலக வரலாற்றின் முக்கிய மணித்துளியில் நடைபெற்ற ஒரே நிகழ்வாக இடம் பெறச் செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, வருகின்ற டிசம்பர் 31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி இரண்டு நாட்களும் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்திருக்கிறது. இந்த வெள்ளிவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் இணைய கழக மையங்கள், தமிழ்ச் சங்கங்கள், பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள், புது டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவும் உள்ளன.
இந்நிலையில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 10 விரைவு பேருந்துகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த 10 பேருந்துகளும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் மற்றும் பெங்களூர் மாநகரத்திற்கு செல்லும் வழித்தட பேருந்துகளாக தேர்வு செய்யப்பட்டு திருவள்ளுவரின் உருவப்படங்கள் மற்றும் புகழினை தாங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளன.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, செயலாளர் பணீந்திர ரெட்டி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) சிற்றரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம்; 10 விரைவு பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.