×

வெளிநாடு வேலை மோகத்தில் இளைஞர்கள் ஏமாற வேண்டாம்

திருச்சி, டிச.24: தமிழகத்தில் இருந்து வௌிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே பணிக்கு செல்ல வேண்டும். வேறு யாரையும் நம்பி ஏமாறுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்கள் சமூக வலைதளம் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் போன்ற நாடுகளிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் “டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’’ தரவு உள்ளீட்டாளர், வேலை அதிக சம்பளம்’ என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால் – சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? போன்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் “அயலகத் தமிழர் நலத்துறை” அல்லது “குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை” அல்லது சம்மந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 9042149222 மூலமாகவும், poechennai1@mea.gov.in, poechennai2@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் “அயலக தமிழர் நலத்துறை”-இன் கட்டணமில்லா 24 மணிநேர அழைப்புதவி மையத்தின் 18003093793, 8069009901, 8069009900 தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

The post வெளிநாடு வேலை மோகத்தில் இளைஞர்கள் ஏமாற வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tamil Nadu ,
× RELATED கட்சி வளரவில்லை… சொத்துகள் மட்டுமே...