×

கல்வித்துறையில் குறுக்கீடு தொடர்ந்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது சட்ட நடவடிக்கை: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி

புதுக்கோட்டை: கல்வித்துறையில் குறுக்கீடு தொடர்ந்தால், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கக்கூடிய தேடுதல் குழுவில் 3 பேரை பல்கலைக்கழக விதியின்படி தான் நியமித்தோம். தன்னுடைய எல்லை எது, எதில் தலையிட வேண்டும், எதில் தலையிடக்கூடாது என்று தெரியாத ஆளுநர் ஆர்.என்.ரவி இதை கண்டித்திருப்பதும், யுஜிசி தேர்வு செய்யக்கூடிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென கூறுவதும் அவரது பொறுப்புக்கு அழகல்ல.

மாநில உரிமைகளை கட்டி காப்பதில் ஒன்றிய அரசோடு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க பல்வேறு மாநிலங்களுக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். திமுக அரசு அமையும் போதெல்லாம் உயர் கல்வித்துறையில் அக்கறை காட்டியதால் தான் கலைஞர் காலத்திலிருந்து இன்று வரை உயர்கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எட்டியுள்ளோம். இதை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் கருத்து தெரிவித்து வருகிறார். அதனால் தான் ஆளுநர் அவரது பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை பணியை பார்க்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்தோம்.

ஆளுநரின் குறுக்கீடுகள் தொடர்ந்தால் முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியான அவரது செயல்பாடுகளை வரையறுக்க வேண்டிய கட்டம் தமிழ்நாடு அரசுக்கு வரும். அந்த கட்டத்தை அவர் எட்டாமல் இருப்பது அவர் பதவிக்கு அழகு. வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களோடு இணைந்து மாணவர்களுக்கு பயிற்சியளித்து வேலை தருவதே முதல்வரின் நோக்கம். சீனா, ஜப்பான், தைவான் போன்று தமிழ்நாட்டை உருவாக்க முயற்சியெடுத்து வருகிறோம். அதற்கான கல்வி திட்டம் உருவாக்கப்படும். கல்லூரிகளில் 2,000 கவுரவ விரிவுரையாளர்களை முதல்வர் நியமித்துள்ளார். அடுத்ததாக 750 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கல்வித்துறையில் குறுக்கீடு தொடர்ந்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது சட்ட நடவடிக்கை: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor R.N. Ravi ,Minister ,Kovi.Sezhiyan ,Pudukkottai ,Higher Education ,Dinakaran ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்...