×

ஈரோட்டில் ரூ.1,368 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி 50,088 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஈரோடு: ஈரோட்டில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.1,368 கோடி மதிப்பில் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும் 50,088 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று கள ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, 2 நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு முதல்வர் நேற்று முன்தினம் வந்தார். முதல் நிகழ்ச்சியாக கடந்த 2021 ஆகஸ்ட் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து நேற்று முன்தினம் கள ஆய்வு ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சனாபுரம் கிராமத்தில் நடந்தது.

அப்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தை சேர்ந்த ராமநாதன் மனைவி சுந்தராம்பாள் (58) என்பவரது வீட்டுக்கு சென்று மருந்து பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து இத்திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளியான நஞ்சனாபுரத்தை சேர்ந்த காளியப்பன் மனைவி வசந்தா (60) என்பவரது வீட்டுக்கு சென்று அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, பிச்சாண்டம்பாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்திற்கு சென்று அங்கு தொழில் நிலவரம் குறித்தும், இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தியதன் பயன் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அதற்கான அரசின் முயற்சி குறித்து விளக்கி கூறினார்.

இதையடுத்து, ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மகாலில் நடந்த திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய களப்பணி குறித்தும், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட அதிகாரிகளுடன் அரசின் திட்டங்கள் செயல்படுத்தியது தொடர்பாக முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தினார். 2வது நாள் நிகழ்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று காலை நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இதில், ஈரோடு சோலார் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.18.48 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை வணிக வளாகம் கட்டுமான பணிக்கும், சத்தியமங்கலம் நகராட்சிக்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10.77 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் குடிநீர் மேம்பாட்டு பணிகள், மொடக்குறிச்சி பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கோபி அம்மாபாளையத்தில் கிளை வாய்க்கால் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, ஈரோடு ரங்கம்பாளையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.9.73 கோடி மதிப்பீட்டில் 150 கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணி,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஈரோட்டில் மைய நூலகம் கட்டுமான பணி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணி, தியாகி பொல்லானுக்கு அரச்சலூர் ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் சிலையுடன் கூடிய நினைவரங்கம் கட்டுமான பணி, சத்தியமங்கலத்தில் அரசு அண்ணா மருத்துவமனையில் ரூ.5.11 கோடி தாய்சேய் நலப்பிரிவு கட்டிடம் கட்டுமான பணி, கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணி என மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.133.66 கோடி மதிப்பீட்டில் 222 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளான ஈரோட்டில் மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் ரூ.45.33 கோடியில் வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் மேம்பாட்டு பணி, கோபி நகராட்சியில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் தினசரி அங்காடி, அம்ரூத் 2.0 மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 28 பூங்காக்கள், மாவட்டத்தில் 130 கி.மீ தூரத்துக்கு ரூ.71.98 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.482 கோடியில் 22 கிராம ஊராட்சிகளில் உள்ள 434 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம், உயர்கல்வித்துறை சார்பில் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அயல்நாட்டு மொழிகள் கற்பித்தல் மையம், அதே கல்லூரியில் ரூ.8.54 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டரங்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.24.78 கோடி மதிப்பீட்டில் உயர்ரக அடுக்குமாடி குடியிருப்பு, 6 தளங்களுடன் வணிக வளாக கட்டிடம்,

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கோபி, சத்தி, பவானி ஆகிய இடங்களில் ரூ.137 கோடி மதிப்பீட்டில் 1,386 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் பவானிசாகரில் ரூ.3.4 கோடியில் தியாகி ஈஸ்வரன் சிலையுடன் கூடிய நினைவரங்கம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.59.60 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்ட ஈரோடு வெளிவட்ட சாலை, ரூ.20 கோடியில் ஈரோடு-கரூர் சாலை விரிவுபடுத்தப்பட்ட பணிகள், ளோண்மை உழவர் நலத்துறை சார்பில் ரூ.24.63 கோடி மதிப்பிட்டில் சித்தோடு, நம்பியூர், தாளவாடியில் எழுமாத்தூரில் அந்தியூர், வெள்ளாங்கோவில், வெப்பிலி, பர்கூர் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், துணை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், கிடங்குகள் என ரூ.951.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 559 திட்டபணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் 50,088 பயனாளிகளுக்கு ரூ.284.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தமாக ரூ.1,368 கோடி மதிப்பில் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், எம்பிக்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், சுப்பராயன், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம், அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம், மொடக்குறிச்சி சரஸ்வதி, மாநகராட்சி ஆணையர் மணீஷ், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், ஐஜி செந்தில்குமார், டிஐஜி சரவண சுந்தர், எஸ்பி ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.133.66 கோடி மதிப்பீட்டில் 222 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

* அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் 50,088 பயனாளிகளுக்கு ரூ.284.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
* மொத்தமாக ரூ.1,368 கோடி மதிப்பில் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
* நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

The post ஈரோட்டில் ரூ.1,368 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி 50,088 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Erode ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திமுக தொடர் திட்டங்களை தருகிற...