மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி 50 அடி உயரத்திலிருந்து உடைந்து விழுந்ததில், நிலக்கரி குவியலில் சிக்கி 2 ஊழியர்கள் பலியாகினர். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல்மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று மாலை மேட்டூர் அனல்மின் நிலையத்தின் முதல் பிரிவில் மூன்றாவது அலகில் பங்கர் டாப் எனப்படும் நிலக்கரி சேமிப்பு தொட்டிக்கு கீழ் 7 ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென நிலக்கரி சேமிப்பு தொட்டி 50 அடி உயரத்தில் இருந்து சரிந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இதில் பொறையூரை சேர்ந்த மனோஜ் (27), மாதையன்குட்டையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (23), வனவாசியை சேர்ந்த திருச்செந்தூர் முருகன் (22), மாதையன்குட்டையை சேர்ந்த சீனிவாசன் (44), கௌதம் (20) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை அனல்மின் நிலைய தீயணைப்பு படையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நிலக்கரி குவியலில் சிக்கிய மேலும் 2 பேரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். நிலக்கரியை அப்புறப்படுத்திவிட்டு தேடியபோது வெங்கடேஷ் (50), பழனிச்சாமி (40) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
பலத்த காயமடைந்த மனோஜ் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவலறிந்து கருமலைக்கூடல் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே விபத்து பற்றி அறிந்து கிராம மக்கள் அனல்மின் நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசாரும் பாதுகாவலர்களும் தடுத்து நிறுத்தியதால் சிறிதுநேரம் பதற்றமான சூழல் நிலவியது. ஆத்திரமடைந்த கிராம மக்கள் மேட்டூர்-சேலம் சாலையில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தொட்டி உடைந்து விழுந்தது உயிரோடு புதைந்து 2 தொழிலாளர் பலி: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.