×

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஏற்பாடுகள்; கன்னியாகுமரியில் அமைச்சர் எ.வ.வேலு 2வது நாளாக ஆய்வு: முதலமைச்சர் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அமைப்பு பணியை பார்வையிட்டார்


கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ. வேலு இன்று 2 வது நாளாக ஆய்வு செய்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் வரும் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். விழா சிறப்புற நடைபெற ஒருங்கிணைப்பாளராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயனை, தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, வரும் 30ம்ேததி மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு வருகிறார். அன்று மாலையில் முதல் நிகழ்ச்சியாக திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இணைக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்டு வரும் பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை மரியாதை, மலர் அஞ்சலி செலுத்திவிட்டு தொடர்ச்சியாக சுற்றுலாத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லேசர் அலங்கார விளக்குகளை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அன்று இரவு விழா அரங்கிற்கு வந்து சுகி சிவம் தலைமையில் நடைபெறுகின்ற பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். தொடர்ந்து கன்னியாகுமரியில் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31ம்தேதி காலை திருவள்ளுவர் படக்காட்சியை பார்வையிடுகிறார். பின்னர் வெள்ளிவிழா நிகழ்ச்சி பொதுக்கூட்ட நிகழ்வுகளை தொடங்கி வைத்து பேசுகிறார். அன்று மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டு செல்கிறார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தமிழ் அறிஞர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சி நிறைவுக்கு பின்னர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஒரு கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியன நடைபெற உள்ளது. கருத்தரங்கம் நிறைவு பெற்ற பின்னர் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மாலை 4 மணி முதல் நடக்கிறது. ஜனவரி 1ம் தேதி பல்வேறு துறை சார்பில் பணியாற்றியவர்கள், அரங்குகள் அமைத்தவர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பரிசுகள் வழங்குகிறார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் கண்ணாடி பால பணிகளை பார்வையிட தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரியில் வெள்ளிவிழா பொதுக்கூட்டத்திற்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் நடைபெற்று வரும் பால பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் அழகு மீனா, மேயர் மகேஷ் மற்றம் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இரவில் கன்னியாகுமரியில் தங்கிய அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை கன்னியாகுமரியில் 2 வது நாளாக ஆய்வு செய்தார். விழா பந்தல் அமைப்பு பணியை இன்று காலையிலும் பார்வையிட்டார்.

கண்ணாடி பால பணிகள் நடைபெறுவதை உறுதி செய்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் மயிலாடி புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் வருகையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஜி. பிரேமத் ஆனந்த் சின்கா நேற்றும் கன்னியாகுமரி வந்தார். டி.ஐ.ஜி. மூர்த்தி, எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோருடன் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டத்திலும் ஐ.ஜி. மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கடற்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயர்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலைக்கு திருவள்ளுவர் சாலை என பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த கடற்கரை சாலையை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சாலையின் அகலம், நீளம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்த அமைச்சர், சாலை புதுப்பிப்பு பணிகள் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

The post திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஏற்பாடுகள்; கன்னியாகுமரியில் அமைச்சர் எ.வ.வேலு 2வது நாளாக ஆய்வு: முதலமைச்சர் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அமைப்பு பணியை பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar Statue Silver Jubilee ,Minister ,E.V. Velu ,Kanyakumari ,Chief Minister ,Dinakaran ,
× RELATED திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா அரசு...