புதுடெல்லி: குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நோட்டீசை மாநிலங்களவை துணை தலைவர் நிராகரித்துள்ளார். குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அவர் மீது நம்பிக்கை இல்லையென்றும் கூறி அவரை குடியரசு துணை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தன்கரை பதவி நீக்கம் செய்யக்கோரி சுமார் 60 எதிர்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் கடந்த பத்தாம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. தலைவருக்கு எதிரான நோட்டீஸ் என்பதால் அவர் இந்த விவகாரத்தில் இருந்து விலகியதை அடுத்து துணை தலைவர் ஹரிவன்ஸ் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவை செயலாளர் மூலமாக அவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த பதிலில், ‘‘குடியரசு துணை தலைவர் தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்டுள்ளது உண்மையில்லாதது மற்றும் விளம்பர நோக்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பதவி நீக்கம் குறித்த நோட்டீசானது நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களை இழிவுபடுத்தும் மற்றும் தற்போதுள்ள குடியரசு துணை தலைவரை இழிவுபடுத்துவதின் ஒரு பகுதியாகும். இந்த நோட்டீஸ் மிகப்பெரிய ஜனநாயகத்தின் துணை குடியரசு துணை தலைவரின் உயர் அரசியலமைப்பு பதவியை வேண்டுமென்றே சிறுமைப்படுத்துதல் மற்றும் இழிவுபடுத்தும் ஒரு தவறான செயலாகும். நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்களின் கவுரவத்தை கருத்தில் கொண்டு இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்படுகின்றது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
The post மாநிலங்களவை தலைவர் தன்கரை நீக்க கோரிய எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் நிராகரிப்பு appeared first on Dinakaran.